உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவனை கடத்தியது ஏன்? எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

சிறுவனை கடத்தியது ஏன்? எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

சென்னை ': காதல் ஜோடியை பிரிக்க, 17 வயது சிறுவனை கடத்தியது தொடர்பாக, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தியிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதலித்து, பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களை பிரிக்க, பெண்ணின் தந்தை வனராஜ் முயன்றார். இது தொடர்பாக, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ., மகேஸ்வரி மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தி, ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த ஜெயராம் ஆகியோரை சந்தித்தார். ஜெகன் மூர்த்தி, ஜெயராம் உதவியுடன், மகேஸ்வரி, வனராஜ், இவரது உறவினர்கள், புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர்கள் என ஐந்து பேர், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே களாம்பாக்கத்தில் இருந்து, தனுஷ் சகோதரரான, 17 வயது சிறுவனை கடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, திருவாலாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வனராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். தற்போது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, இரு தினங்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஜெகன் மூர்த்தியிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையை வாக்கு மூலமாக 'வீடியோ' பதிவும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை