உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடிகால் தொட்டிக்குள் பெண் விழுந்து இறந்தது உறுதி

வடிகால் தொட்டிக்குள் பெண் விழுந்து இறந்தது உறுதி

சென்னை:மழைநீர் வடிகால்வாயின் வண்டல் வடிகால் தொட்டிக்குள் விழுந்ததால் தான் பெண் உயிரிழந்தார் என்பது, 'சிசிடிவி' பதிவுகளில் தெரியவந்துள்ளது. சென்னை கோடம்பாக்கம், வரதராஜப்பேட்டை வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் தீபா,41. வீட்டு வேலை தொழிலாளியான தீபா, சென்னை அண்ணா நகர், வீரபாண்டி நகர் முதல் தெருவில் உள்ள, மழைநீர் வடிகால்வாயின் இணைப்பாக உள்ள வண்டல் வடி தொட்டிக்குள் தலைகீழாக இறந்து கிடந்தார். 'சிறி ய அளவிலான இந்த தொட்டிக்குள் விழ வாய்ப்பு இல்லை; மர்ம நபர்கள் கொலை செய்து, அந்த தொட்டிக்குள் திணித்து இருக்கலாம்' என, சந்தேகம் எழுந்தது. இதனால், சூளைமேடு போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தீபாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே., நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், தீபாவின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிர் பிரிந்து இருப்பது தெரியவந்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்த போது, நேற்று முன் தினம், இரவு, 12:30 மணியளவில் தீபா தொட்டிக்குள் விழும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், தீபாவின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

'மழைநீர் வடிகாலில் விழுந்து, தீபா என்ற பெண் பலியானதற்கு, தி.மு.க., அரசே பொறுப்பு' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சென்னை சூளைமேடு பகுதியில், நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து, தீபா என்ற பெண் உயிரிழந்துள்ளார். மழைநீர் வடிகால் பள்ளத்தை மூடுமாறு, அப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் , நடவடிக்கை எடுக்காததால் இந்த உயிர் பலி நடந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், அரை மணி நேரம், அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95, 97 சதவீதம் முடிந்து விட்டது என்று, சதவீதக் கணக்கு போட்ட தி.மு.க., அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும், இந்த உயிரிழப்புக்கு சொல்லப் போகும் பதில் என்ன? மழைநீர் வடிகால்வாய் பணிகளும் முடியவில்லை; மழைநீரும் வடிந்தபாடில்லை; அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை. தீபா உயிரிழப்புக்கு, தி.மு.க., அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளோடு, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ