பாதயாத்திரை சென்ற பெண்கள் வாகனம் மோதி பலி
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரு பெண்கள் பலியாகினர். 5பேர் காயமடைந்தனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி உற்ஸவம் நடக்கிறது. ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரில் இருந்து, 18 பெண்கள் நேற்று முன்தினம் இரவில் திருவெற்றியூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாதயாத்திரை சென்றனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆர்.எஸ். மங்கலம் அருகே உப்பூர் நாகனேந்தல் விலக்கில் ரோட்டோரத்தில் நடந்து சென்ற போது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் முனியசாமி மனைவி சாந்தி 50, பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி 40, சம்பவ இடத்திலே பலியாயினர். காயமடைந்த 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.