தமிழகத்தில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி ஏஜன்ட்களிடம் ஏமாறும் நிலை நீடிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை குறிவைக்கும் போலி ஏஜன்ட்கள், 'அதிக சம்பளம், நல்ல வேலை' என ஆசை வார்த்தை கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறித்து, வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அரசிடம் பதிவுபெறாத முகவர்கள், வேலை விசா பெறாமல் சுற்றுலா விசா மூலமும், முறையான ஒப்பந்தங்கள் இன்றியும், வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இது, புலம்பெயர் தொழிலாளர் கடத்தல் சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது.தமிழகத்தில் இருந்து துபாய் நாட்டிற்கு, சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த ஜாஸ்லின் குளோரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த சுல்தானா ஆகியோர் வேலைக்கு சென்றனர். இவர்கள் அந்த நாட்டில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த பின், போதுமடா வெளிநாட்டு வேலை என்று கதறியபடி, தாய் நாட்டிற்கு கண்ணீர் மல்க திரும்ப வந்துள்ளனர்.இருவரும், தமிழக அரசின் அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வளர்மதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், 'தமிழகத்தில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்றோம். அங்கு வேலை வாங்கித் தருவதற்காக, ஏஜென்ட்டுக்கு ரூ. 2 லட்சம் வரை கமிஷன் கொடுத்துவிட்டு சென்றோம். அந்த நாட்டில், நர்ஸ் வேலைக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம், வீட்டு வேலைக்கு ரூ.25 ஆயிரம் வரை கிடைக்கும் என நம்ப வைத்தனர்.அங்கு சென்ற பின், எங்களை கடுமையான வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தினர். கடுமையாக திட்டியதுடன், தாக்கினர். வேலைக்கு முறையான சம்பளம், உணவு கொடுக்காமல் துன்புறுத்தினர். அடிக்கடி, வெவ்வேறு ஏஜன்ட்களிடம் எங்களை வேலைக்கு அனுப்பி அலைக்கழித்தனர். இறுதியில், விசா காலம் முடிந்துவிட்டதால், நாங்களே தாய் நாட்டிற்கு செல்ல விரும்புவதாக கட்டாய கடிதம் எழுதி வாங்கினர். சொந்த நாட்டிற்கு செல்வதற்கு பல லட்சம் ரூபாய் தண்டம் கட்டுமாறு மிரட்டினர். எங்களது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து, பணம் திரட்டி, விமான டிக்கெட் சொந்த செலவில் எடுத்து நாடு திரும்பினோம்.எங்களைப் போன்று நுாற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்கள், துபாய் நாட்டில் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். மேலும், கடிதம் மூலம் புகாரும் அனுப்பி உள்ளனர். தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையால், பெண்கள் இருவரும் தற்போது ஊட்டி மற்றும் பெங்களூரு பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளனர். -நமது சிறப்பு நிருபர் -