பாலியல் வன்கொடுமை வழக்கு வாலிபரின் சிறை தண்டனை ரத்து
சென்னை:கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரை, 2018ல் போத்தனுார் போலீசார், 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, கோவை சிறப்பு நீதிமன்றம், குமாருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 11,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2023ல் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் குமார் மேல்முறையீடு செய்தார். இம்மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. பொய் புகார்
அப்போது, 'பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் மூத்த சகோதரியை, குமார் காதலித்தார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர், வேறொருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். 'இந்த திருமணத்துக்கு குமார் இடையூறாக இருப்பார் என்று கருதி, தங்கையை வைத்து பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.அரசு தரப்பில், 'பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் பிறழ்சாட்சியாக மாறியிருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களை நிராகரிக்க முடியாது என்பதால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் உண்மையாக இருந்தால், வழக்கில் உண்மையான புகார்தாரரான தாய் ஏன் பிறழ் சாட்சியாக மாறினார் என்பதற்கு, எந்த காரணமும் இல்லை. வழக்கில் பெண்ணின் பெற்றோர், அரசு தரப்பு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. ஆதாரமில்லை
வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண் ஆளானதற்கு, எந்தவொரு ஆதாரமும் இல்லை என, மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சகோதரி, குமாருடனான தன் உறவை மறுப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது என்பதால், குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும், அவர் விடுவிக்கப்படுகிறார். சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்கில் மனுதாரருக்கு தொடர்பு இல்லை எனில், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.