உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; முறியடித்த ரஷ்ய ராணுவம்
மாஸ்கோ: ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் மிகப்பெரிய 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமான தாக்குதலை நேற்று நடத்தியது. இவற்றில், 337 ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை ஏவி இடைமறித்து தாக்கி அழித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், ரஷ்ய வான்பரப்பின் மீது, உக்ரைன் படையினர் மிகப்பெரும் ட்ரோன் தாக்குதலை நேற்று அரங்கேற்றினர். இந்த தாக்குதல்களை, தங்கள் படையினர் வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்ய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோ மற்றும் குர்ஸ்க் பகுதியில் ஏவப்பட்ட, 337 ட்ரோன்களை நடுவானில் தாக்கி வீழ்த்தியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதுதவிர, ஏராளமான குடியிருப்புப் பகுதிகளும், கார்களும் சேதமாகின. இந்த தாக்குதல் காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதேபோல் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் பேச்சு
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டாவில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, உக்ரைன் - அமெரிக்கா இடையே பேச்சு நடந்தது. சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல்- சவுத் முன்னிலையில் நடந்த இந்த பேச்சில், அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். உக்ரைன் சார்பில், அந்நாட்டு அதிபரின் தலைமை தளபதி ஆண்ட்ரி யெர்மக், வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, ராணுவ அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் ஆகியோர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சில், வான் மற்றும் கடல் வழி தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என, உக்ரைன் வலியுறுத்தியது. மேலும், பாதுகாப்பு உத்தரவாதங்களை கோரியது. முழுமையான போர் நிறுத்தத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இந்த பேச்சில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியிடப்படவில்லை.