| ADDED : டிச 27, 2025 06:55 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவின் வட கரோலினாவின் சார்லட் புறநகர்ப் பகுதியில் மர்மநபர் ஒருவன் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த சம்பவத்தில், மின்ட் ஹில் போலீஸ் ஸ சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயம் அடைந்தனர். அந்த நபர் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியதும், பதிலுக்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது அந்த நபர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆரம்பத்தில், காயம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமை சீராக இருப்பதாகவும், துப்பாக்கிச்சூடு குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் ரோடு தீவு மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர். கலிபோர்னியாவின் ஸ்டாக்டனில் உள்ள லூசில் அவென்யூவின் பகுதியில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.