மேலும் செய்திகள்
ஸ்பெயின் வெள்ளம்: 51 பேர் பலி
31-Oct-2024
கொழும்பு, இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர்; பலர் மாயமாகினர். இதுதவிர, 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கைக்கு அருகே வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் கடந்த சில நாட்களாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், ஊவா மாகாணத்தின் பாதுளாவில் மலையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாமந்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், பள்ளி முடிந்து டிராக்டரில் தங்கள் வீட்டிற்கு திரும்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிராக்டர் சிக்கியது.இதில், இரண்டு மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்தனர். மற்றவர்களை, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதேபோல், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி தவிக்கும் நபர்களை, ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலர் மாயமானதால், அவர்களை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.நாடு முழுதும் மழை வெள்ளத்தால் இதுவரை 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் 100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.மோசமான வானிலை காரணமாக, இலங்கையில் விமானம் மற்றும் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான பயணியர் அவதிக்குள்ளாகினர்.
31-Oct-2024