UPDATED : ஜூலை 28, 2011 03:10 AM | ADDED : ஜூலை 27, 2011 09:28 PM
பீஜிங் : சீனாவில் கடத்தப்பட இருந்த 89 குழந்தைகளை போலீசார் மீட்டனர். இதில், ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்ட இரு கும்பல்களைச் சேர்ந்த, 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைத் திட்டம் அமலில் உள்ள சீனாவில், ஆட்கடத்தல் தொழில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் ஆட்கடத்தல் தடுப்புப் படை உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், வியட்நாமில் இருந்து சீனாவின் குவாங்ஷி மற்றும் குவாங்டாங் மாகாணங்களில் விற்பதற்காகக் கடத்தி வரப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டன. குழந்தைகளைக் கடத்தியவர்களில் பெரும்பாலோர் வியட்நாம் நாட்டவர். அதேபோல் மற்றொரு நடவடிக்கையிலும் குழந்தைகள் மீட்கப்பட்டன. மொத்தமாக இரு நடவடிக்கைகளிலும், 89 குழந்தைகள் மீட்கப்பட்டன. இக்குழந்தைகள் அனைத்தும் 10 நாளில் இருந்து எட்டு மாதம் வரையிலான வயதுடையவை. இந்த இருசம்பவத்திலும், ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்ட இரு கும்பல்களைச் சேர்ந்த, 369 பேர் கைது செய்யப்பட்டனர்.