வாஷிங்டன்: 'சீனாவின் கடன் பொறியில் சிக்கவேண்டாம்' என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதில் முதல் ஆளாக சிக்கியிருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்கா, உலகின் வல்லரசு நாடாக இருந்தாலும் பொருளாதாரம், ராணுவம் போன்றவற்றால் நம் அண்டை நாடான சீனா, அதன் கடும் போட்டியாளராகவே உள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்கா, அது ஒரு கடன் பொறி தந்திரமிக்க நாடு என்று விமர்சித்து வருகிறது. மேலும் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளை, சீனாவிடம் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் எச்சரித்து வந்தது.இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வில்லியம் அண்டு மேரி கல்லுாரியின் 'எய்ட்டேட்டா' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, சீனாவின் பொறியில் அமெரிக்கா எப்படி சிக்கியுள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவிடம் அதிகம் கடன் பெற்ற வளர்ந்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவே என்ற அதிர்ச்சி தகவல் அதில் கூறப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2000ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சீன வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி என, சீன அரசு வங்கிகள் உலகம் முழுதும், 177 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இதில், 50 சதவீதத்தை வளர்ந்த நாடுகள் பெற்றுள்ளன.அதிலும் அமெரிக்காவுக்கு மட்டும், 17,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை நேரடி அரசு கடன்கள் அல்ல. அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதற்கோ அல்லது அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கோ சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களாகும்.இந்தக் கடன்களில் பெரும்பாலானவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதாவது எந்த இடத்திலும் சீன அரசு இதில் நேரடியாக ஈடுபடவில்லை. அதே நேரத்தில், தன் நாட்டு நிறுவனங்கள், வங்கிகள் வாயிலாக, அமெரிக்க நிறுவனங்களை தங்கள் பொறியில் சிக்க வைத்துள்ளது.அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களில் 88 சதவீதம், உயர் தொழில்நுட்ப மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த கடன் முன்பு 46 சதவீதமாக மட்டுமே இருந்தது.கடந்த, 2015-ல் சீனா, 'மேன் இன் சீனா 2025' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் செமிகண்டக்டர், பயோடெக்னாலஜி, ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்ற 10 முக்கிய துறைகளில் 70 சதவீதம் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அந்த இலக்கு.இதை முன்வைத்தே அமெரிக்க தொழில்நுட்ப துறைகளுக்கு அதிக கடன்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.இவ்வாறு அமெரிக்காவை மறைமுகமாக தன் கட்டுப்பாட்டில் சீனா வைத்துள்ளது. கடன் வாயிலாக வேட்டையாடும் கொடூர மிருகமாக சீனா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ சீனாவின் வலையில் அமெரிக்கா தற்போது சிக்கிக் கொண்டுள்ளது. தன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக கொடுக்கப்பட்ட கடன்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு என்ற அமெரிக்காவின் குடுமி தற்போது சீனாவின் கையில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சீனாவின் அபாய விளையாட்டு!
மற்றவர்கள் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கையில், சீனா சதுரங்க விளையாட்டை நடத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தக் கூடிய தொழில்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதிலேயே, இந்த கடன் போரில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், சீனாவின் கையே ஓங்கியுள்ளது.வில்லியம் ஹெனகன்,வெள்ளை மாளிகை முன்னாள் முதலீட்டு ஆலோசகர்