பொறுப்பற்ற பாகிஸ்தானால் பேச்சு தோல்வி ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு
காபூல்: அமைதிப்பேச்சு தோல்வியில் முடிந்ததற்கு பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையும், ஒத்துழையாமையும் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், ஆட்சி நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு 2021ல் கைப்பற்றியது. தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் தெஹ்ரிக்- - இ - -தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாக்., குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாக்., வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்தனர்; 447 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில், பாக்., வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்பிறகும் தாக்குதல் தொடர்ந்த நிலையில், துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு தோல்வியடைந்தது. இந்த நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மீண்டும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இரண்டு நாட்கள் மூன்றாம் கட்ட பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையும், ஒத்துழைக்காத மனமும் தான் காரணம் என்று, தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபீஉல்லா முஜாஹித் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானிடமிருந்து யதார்த்தமான மற்றும் செயல்படுத்தக்கூடிய கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படைத் தீர்வு காணப்படும் என எதிர்பார்த்தோம். பேச்சின் போது, பாக்., தங்கள் தரப்பு பாதுகாப்பு தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் ஆப்கன் மீது திணிக்க முயன்றது. அதேநேரத்தில், ஆப்கன் பாதுகாப்புக்கான எந்த பொறுப்பையும் ஏற்க அவர்கள் விருப்பம் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்த பாக்., செய்தி அமைச்சர் அட்டாவுல்லா தாரர், “ஆப்கன் மக்களுக்கோ அல்லது அண்டை நாடுகளின் நலனுக்கோ எதிரானதாக இருந்தால், தலிபான் அரசின் எந்த நடவடிக்கையையும் ஆதரிக்க மாட்டோம்,” என்று கூறினார். அகதிகள் கைது 146% உயர்வு பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் அகதிகளின் கைது நடவடிக்கை கடந்த ஒரு வாரத்தில், 146 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்தனர். தற்போது இரு நாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, ஆப்கன் அகதிகளை பாக்., நாடு கடத்தி வருகிறது. சட்டவிரோத குடியேற்றம், ஆவணங்கள் இல்லாதது போன்றவற்றை காரணம் காட்டி, ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 7,764 ஆப்கன் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய வாரம் கைது செய்யப்பட்டோருடன் ஒப்பிடுகையில், இது 146 சதவீதம் அதிகம்.