உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க சுகாதார காப்பீடு திட்டத்தில் மோசடி : 19 இந்தியர்கள் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க சுகாதார காப்பீடு திட்டத்தில் மோசடி : 19 இந்தியர்கள் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு

நியூயார்க் : அமெரிக்காவின், 'மெடிகெய்டு' சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்ததாக, 19 இந்தியர்கள் உட்பட 26 பேர் மீது அந்நாட்டு கோர்ட் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 65 வயதுக்கு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 'மெடிகேர்', குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான 'மெடிகெய்டு' ஆகிய சுகாதாரக் காப்பீடு திட்டங்களும், தனியார் சுகாதாரக் காப்பீடு திட்டங்களும் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளைத் திட்டமிட்டு, தங்களிடம் மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்ய வைத்து, தங்களுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் மருந்து வாங்க வைத்ததன் மூலம், பல கோடி ரூபாய் மோசடியில் டாக்டர்கள், மருந்து தயாரிப்போர் சிலர் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு கண்டறிந்தது. மேலும் இவர்கள் சட்ட விரோதமாக, சில வலி நிவாரணி மருந்துகளை பயனாளிகளுக்கு அளித்ததும் தெரிய வந்தது.

இந்த மோசடியில் தற்போது 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் இந்தியர். இந்தியர்களில், பாபுபாய் படேல் என்பவர் மீது மட்டும் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்குச் சொந்தமாக 26 மருந்துக் கடைகள் உள்ளன. இவர், பிற டாக்டர்களுக்கு பரிசுப் பொருட்கள், லஞ்சம் கொடுத்து அவர்களிடம், சுகாதாரக் காப்பீடு திட்டங்களின் கீழ் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் பயனாளிகளை தன் மருந்துக் கடைகளில் மருந்து வாங்க வைத்தார் எனவும், பல பயனாளிகள் சுகாதாரக் காப்பீடு திட்டங்களின் கீழ், தனது கடைகளில் மருந்து வாங்கியதாக இவர் போலி ரசீதுகளை உருவாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படேல், 2006 ஜனவரி முதல், 'மெடிகேர்' திட்டத்தின் கீழ் 37.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 'மெடிகெய்டு' திட்டத்தின் கீழ் 20.8 மில்லியன் டாலர் அளவிற்கும் மோசடி செய்துள்ளார். பாபு படேல் தவிர, பவுல் பீட்டர், தினேஷ்குமார் படேல், அனீஷ் பவ்சார், அஸ்வினி சர்மா, பினாகின் படேல், கார்த்திக் ஷா, வைரல் தாக்கூர், ஹிரண் படேல், மிதேஷ்குமார் படேல், லோகே தயாள், நரேந்திர செரகு மற்றும் சேத்தன் குஜராத்தி ஆகிய மருந்து தயாரிப்போர் மீதும் அமெரிக்க அரசு மோசடி குற்றம் சுமத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை