உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய - வங்கதேச வெளியுறவு செயலர்கள் சந்திப்பு

இந்திய - வங்கதேச வெளியுறவு செயலர்கள் சந்திப்பு

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்கள் குவிந்ததையடுத்து, அங்கு சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, இது குறித்து அந்நாட்டு செயலரிடம் நேற்று கவலை தெரிவித்தார்.வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கடந்த ஜூலை மாத இறுதியில் அங்கு கலவரம் வெடித்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியை துறந்த ஷேக் ஹசீனா, ஆக., 5ல் நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அவர் பதவியேற்றது முதல் இந்தியா - வங்கதேசத்துக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது, அதைத் தொடர்ந்து ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு சம்பவங்கள், இந்தியாவை கவலையடைய செய்துள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஒருநாள் அரசுமுறை பயணமாக நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று வங்கதேசம் சென்றார். அந்நாட்டு வெளியுறவு செயலர் முஹமது ஜஷிம் உத்தின் மற்றும் அதிகாரிகளை டாக்காவில் சந்தித்து உயர்மட்ட அளவிலான பேச்சு நடத்தினார். அப்போது, சிறுபான்மையினர் குறிப்பாக ஹிந்துக்கள் தாக்கப்படுவது குறித்து விக்ரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார். அவர்கள் பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளியுறவு ஆலோசகர் முகமது தவ்ஹீத் ஹுசைனை அவர் சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் மிஸ்ரி, ''வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு, நலன் மற்றும் மத தலங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. ''இந்த பேச்சு வெளிப்படையானது; நேர்மையானது மற்றும் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை இந்த விவாதங்கள் வழங்கின,'' என்றார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின், இந்திய அதிகாரி ஒருவர் வங்கதேசத்துக்கு செல்லும் முதல் பயணம் இது.

'லாலி பாப்' சாப்பிட்டு கொண்டிருக்க மாட்டோம்

வங்கதேசத்தின் டாக்காவில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வங்கதேச தேசியவாத கட்சி தலைவர்கள், 'இந்தியாவில் உள்ள மேற்கு வங்கம், ஒடிசா, பீஹார் மாநிலங்களில் வங்கதேசத்திற்கு நியாயமான உரிமைகள் உள்ளன' என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து, மேற்கு வங்க சட்டசபையில் நேற்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:அன்னிய சக்திகள் நம் நாட்டை சொந்தம் கொண்டாடும்போது, இங்குள்ள இந்தியர்கள், 'லாலி பாப்' சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் இந்த பேச்சுக்கு யாரும் உடனடியாக எந்த விதத்திலும் பதில் அளிக்க வேண்டாம். தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிட வேண்டாம். அனைவரும் அமைதி காக்கவும். வங்கதேசத்தின் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போது கவனமாக இருக்கவும். ஊடக நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ