லாஸ் ஏஞ்சலஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நகரில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை தீப்பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.குறிப்பாக, பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக, நான்கு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 10,000 வணிக கட்டடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. நடிகர்-கள் வீடு
இதுவரை, 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சலசில் நடிகர்- - நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதேபோல், காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையே, தண்ணீர் பற்றாக்குறையால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் தீயை அணைக்க போதுமான தண்ணீரின்றி தீயணைப்பு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மிகப்பெரிய சவால்
இதனால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதுபோல், 22க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவி உள்ளன.லாஸ் ஏஞ்சலஸ் நகரம், கடல் மட்டத்தை விட 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் நீர் அழுத்தம் கூடுதலாக தேவைப்படும். தீ விபத்து போன்ற அவசர காலங்களில், மற்ற நகரங்களில் இருந்தும் தண்ணீரை உடனே வினியோகிக்க முடியாத நிலை உள்ளது. அதற்குரிய சாதனங்களும் போதிய அளவு இல்லை எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகளில் பரவியுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் அளவிற்கு தண்ணீர் இருப்பு இல்லை.இதுகுறித்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசன் கூறுகையில், ''காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. ''இதற்கான காரணம் குறித்து அறிய, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், தீயை கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.இதுபோன்ற தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட காரணம், தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காததுடன், உரிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என, லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர் கேரன் பேஸ் உட்பட பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பனிப்புயலால் கடும் பாதிப்பு
ஒருபுறம் காட்டுத் தீயால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் நிலைகுலைந்துள்ளது. மறுபுறம் டெக்சாஸ், வாஷிங்டன், டென்னசி, ஜார்ஜியா, அட்லாண்டா உட்பட 26 மாகாணங்களில் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டா சாலைகளில் 1 அடிக்கு பனி படர்ந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'அவசியமற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். எங்கு சென்றாலும், முதலுதவிக்கான மருத்துவ சாதனங்களை எடுத்துச்செல்ல வேண்டும். போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.