உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டினர் வருகை கட்டாய பதிவு: அமெரிக்காவில் புதிய விதி அமல்

வெளிநாட்டினர் வருகை கட்டாய பதிவு: அமெரிக்காவில் புதிய விதி அமல்

வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் அனைவரும் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரின் வருகையை பதிவு செய்வதற்காக, 'ஏலியன்' பதிவு சட்டம், 1940ல் உருவாக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும் தங்கள் வருகையை பதிவு செய்து சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.காலப்போக்கில் இந்த நடைமுறை படிப்படியாக கைவிடப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டினர் தங்கள் வருகையை பதிவு செய்யும் நடைமுறையை அமெரிக்க அரசு மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது.இதன்படி, கடந்த 11க்கு பின் அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அங்கு, 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்குவதாக இருந்தால், 'ஜி325ஆர்' என்ற விண்ணப்பத்தை பெற்று தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு அவர்களது பெற்றோர் பதிவு செய்ய வேண்டும்.இந்த வருகை பதிவை செய்ய தவறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என, அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது. அதே போல அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் வீட்டு முகவரி மாற்றத்தை 10 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை எனில், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.சிறுவர் - சிறுமியர், 14 வயதை கடந்தால் அவர்களது விபரங்கள் மற்றும் கை ரேகை பதிவுகளை, 30 நாட்களுக்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை மற்றும் படிப்புக்கான விசா வைத்துள்ளோர், 'கிரீன் கார்டு' வைத்துள்ளோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக கருதப்படுவர். அவர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதே நேரம், அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்படுவர்

முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிப்போர் பதிவு செய்வதால், அவர்கள் தொடர்ந்து வசிக்க உத்தரவாதம் அளிக்கப்படாது. அவர்கள் நாடு கடத்தப்படுவர். குடியுரிமை பெறாத, 18 வயதுக்கு மேற்பட்டோர் எங்கு சென்றாலும், அவர்கள் பதிவு செய்தததற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 14, 2025 20:53

அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்களுக்கும் இதேபோல் செய்யவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 14, 2025 08:55

அப்புறம் பதினஞ்சு வருஷம் கழிஞ்சுதான் அவங்க குடியுரிமை க்கு அப்ளை பண்ணுனா ....


மீனவ நண்பன்
ஏப் 14, 2025 05:45

இராக்கில் 50000 பாகிஸ்தானியர் முறையான விசாவில் வேலைக்கு சென்று அங்கிருந்து திரும்பி வரவில்லை புதிய நடைமுறையின் படி இராக்கில் நுழையும் பாகிஸ்தானியர்கள் தங்கள் பாஸ்ப்போர்ட்களை ஏர்போர்ட்டிலேயே கொடுத்துவிட்டு வெளியே செல்ல வேண்டும் திரும்பி வரும்போது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை