லண்டன்: தேவையை காட்டிலும், அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், ஐரோப்பிய மின் சந்தையில் விலை பூஜ்யத்துக்கும் கீழே சென்று விட்டது. இதனால் மின்சாரம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லாபம்; உற்பத்தியாளர்கள், வினியோகிப்பாளர்கள் பாடு பெரும் திண்டாட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பசுமை மின்சாரம்
ஐரோப்பிய நாடுகளில் காற்றாலை, சோலார், நீர் மின்சாரம், நிலக்கரி, இயற்கை எரிவாயு, அணு மின்சாரம் என பல வழிகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், புதுப்பித்தக்கக்க, பசுமை மின் உற்பத்தியை, ஐரோப்பிய நாடுகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன.இப்படி ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வினியோக நிறுவனங்களின் 'கிரிட்' மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.யாரிடமும் வாங்கலாம்
மின் விற்பனை சந்தையில், எந்த வாடிக்கையாளரும், தங்களுக்கு வசதியான மின் உற்பத்தி நிறுவனத்திடம், தங்களுக்கு ஏற்ற விலையில் மின்சாரம் வாங்கிக்கொள்ள முடியும்.வேறு நிறுவனம், குறைந்த விலைக்கு மின்சாரம் சப்ளை செய்தால், அங்கு மாறிக்கொள்ளவும் முடியும். இதன் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். டிமாண்ட் மற்றும் சப்ளை என்பது தான் சந்தையின் அடிப்படை.இத்தகைய சூழலில் தான் ஐரோப்பிய நாடுகளில் காற்றாலை, சோலார் மின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து விட்டது. எதிர்மறை விலை
குறிப்பாக, ஜெர்மனியில் கடந்த 4 மாங்களில் இல்லாத வகையில், காற்றாலை மூலம் அதிகபட்சமாக, 22.7 ஜிகா வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாவதால், மின் சந்தையில் தேவைக்கு அதிகமான மின்சாரம், வாங்க ஆளின்றி இருக்கிறது.மணிக்கு ஒரு முறை நடக்கும் மின் சந்தை ஏலத்தில், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 6 மணி நேரம், அதல பாதாளத்துக்கும் கீழே (மைனஸ்) மின்சார விலை சென்று விட்டது. ஜெர்மனி உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளின் மின் விற்பனை சந்தைகளிலும் மின்சாரம் விலை, பூஜ்யத்துக்கும் கீழே தான் இருக்கிறது.கத்தரிக்காய் கால் பணம்; கூவி விற்றால் முக்கால் பணம் என்று நம்மூரில் கிராமத்துப் பாட்டிகள் சொலவடை சொல்வர். அதை உல்டாவாக மாற்றியது போல, ஐரோப்பிய மின் சந்தையின் நிலவரம், பெரும் கலவரமாக மாறியிருக்கிறது.தீர்வு என்ன!
இவ்வாறு மின்சார விலை, 'மைனஸ்' என்ற நிலையை எட்டுவது, நுகர்வோருக்கு குறுகிய காலத்துக்கு பயனளிப்பதாக இருக்கும்; ஆனால், சோலார், காற்றாலை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியை நம்பியிருக்கும் கிரிட் நிர்வாகிகளுக்கு, இந்த விலை பெரும் சவாலாக இருக்கும்.சோலார், காற்று இல்லாத காலங்களில், வினியோக கிரிட் மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களை சமாளிக்க பேட்டரி மூலம் மின் சேமிப்பு என்பது கைகொடுக்கும்.தேவைக்கு அதிகமாக பசுமை மின்சாரம் உற்பத்தியாகும் போது, அதை பேட்டரியில் சேமித்து வைத்து, சூரிய ஒளி மற்றும் காற்றின் அளவு குறைவாக இருக்கும் போது, அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.முதலீடு அவசியம்
ஐரோப்பா நாடுகள் தொடர்ந்து பசுமை மின்உற்பத்தியை அதிகரிக்கும் போது, இது போன்ற எதிர்மறை விலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழும். எனவே, மின் வினியோக பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, உற்பத்தி செய்யப்பட்ட பசுமை மின்சாரத்தை சேமிக்கத் தேவையான திட்டங்களில் முதலீடு எதிர்காலத்துக்கு அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.