இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதர் செர்ஜியோ
வாஷிங்டன்:இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதராக, அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பரும், வெள்ளை மாளிகை பணியாளர் துறை இயக்குநருமான செர்ஜியோ கோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி இருந்தார். இவர், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டவர். இந்தாண்டு ஜனவரி 20ல் டிரம்ப் அதிபரானதும், இவர் பதவி விலகினார். இதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி காலியாக இருந்தது. தற்போது இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக செர்ஜியோ கோர் என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இவர், டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மற்றும் அவரது பிரசாரத்துக்கு நிதி திரட்டியவர். இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். செர்ஜியோ என் நெருக்கமான உதவியாளராகவும், நம்பகமான ஆலோசகராகவும் இருந்தவர்; நல்ல நண்பர். அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவை பேணுவார். இந்தியா - அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர் சிறப்பான தேர்வாக இருப்பார். இந்தியாவின் அற்புதமான மக்களுடன் நல்ல நட்புறவை வளர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.