உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதி அரேபியாவில் விபத்து ஒன்பது இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவில் விபத்து ஒன்பது இந்தியர்கள் பலி

ஜெத்தா : சவுதி அரேபியாவில் பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில், ஒன்பது இந்தியர்கள் உட்பட 15 பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்தனர்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், ஹசீர் மாகாணத்தின் துறைமுக நகரமான ஜிசானில், 26 தொழிலாளர்களுடன் கடந்த 26ம் தேதி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில், இந்தியா, நேபாளம், கானா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.வாதி பின் ஹாஸ்பல் என்ற இடத்தை அடைந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் பஸ்சில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். இதில், ஒன்பது இந்தியர்களும், நேபாளம் மற்றும் கானா நாடுகளைச் சேர்ந்த தலா மூன்று பேரும் அடங்குவர். இது தவிர, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் கூறுகையில், 'இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க துாதரக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் மேற்கொள்வர்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை