| ADDED : செப் 06, 2024 06:59 AM
வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்' என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார்.உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார். தேர்தல் வந்தாலே தேர்தல் கணிப்பாளர்களுக்கு வேலை வந்துவிடும். நவம்பர் 5ம் தேதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு, பிரபல தேர்தல் கணிப்பாளர் ஆலன் லிச்மேன் அளித்த பேட்டி: அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார். இதுவே எனது கணிப்பு முடிவு. அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்.அதிபர் தேர்தலில் ஒருவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை உறுதி செய்ய, 13 கேள்விகளுக்கு விடை தெரிந்தால் போதும். அந்த வகையில், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக 8 புள்ளிகளும், டிரம்புக்கு எதிராக 5 புள்ளிகளும் உள்ளன. இரண்டு கேள்விகளுக்கான விடை டிரம்புக்கு சாதகமாக மாறினாலும், எனது பார்முலாவின்படி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவை போதுமானதாக இருக்காது. இதனால் டிரம்ப் வெள்ளை மாளிகையை அடைய முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இவரது கணிப்பு டிரம்ப் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யார் இந்த லிச்மேன்?
* அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளாக வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஆலன் லிச்மேன். இவருக்கு வயது 72. * 40 ஆண்டுக்கு மேலாக, அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை துல்லியமாக கணித்து வருகிறார். * 2016 மற்றும் 2020 தேர்தலில் வெற்றியை லிச்மேன் துல்லியமாக கணித்தார்.* இவர், 13 முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு சரி, தவறு என்ற அடிப்படையில் விடை அறிந்து, வெற்றியைக் கணிக்கிறார்.* அதிபராக இருப்பவருக்கு எதிராக, 6 அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கான விடை அமைந்தால், அவரது தோல்வி நிச்சயம் என்பது இவரது கணக்கு.