UPDATED : மே 22, 2024 11:38 AM | ADDED : மே 21, 2024 04:47 PM
பாங்காக்: லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற பயணியர் விமானம், நடுவானில் குலுங்கியதில், அதில் சென்ற பிரிட்டன் பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு, 211 பயணியர் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.கடல் மட்டத்தில் இருந்து 37,000 அடி உயரத்தில் பறந்த போது, விமானம் திடீரென சமநிலையை இழந்து குலுங்கியது. விமானத்தில் இருந்த பயணியர் அதிர்ச்சி அடைந்ததுடன், இருக்கையில் இருந்து பலர் துாக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் சரிந்து விழுந்தன.இதையடுத்து, பாங்காக்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனே, விமானத்திற்குள் சென்று மீட்புக்குழுவினர், உள்ளே இருந்த பயணியரை பத்திரமாக மீட்டனர்.இச்சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக விமானத்தில் பயணித்த 73 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.காயமடைந்த 30 பேரை, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை பதிவு செய்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார் எனவும் குறிப்பிட்டு உள்ளது.