| ADDED : அக் 07, 2025 06:27 AM
லாசா:உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட், கடல் மட்டத்தில் இருந்து 29,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஏராளமான மலையேற்ற சாகச வீரர்களை ஈர்க்கும் இந்த சிகரத்தில், அக்டோபர் மாதம் பொதுவாக மிதமான வானிலை நிலவும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் வந்த கடுமையான பனிப்புயல், மலையேற்ற வீரர்களையும், வழிகாட்டிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இது, சீனாவைச் சேர்ந்த பிராந்தியமாகும். இங்கே கடந்த 3ம் தேதி இரவு துவங்கி அடுத்த நாள் இரவு வரை தொடர்ந்த பனிப்புயல், எவரெஸ்டின் கிழக்கு பகுதியில் உள்ள கர் மா பள்ளத்தாக்கை கடுமையாக பாதித்தது. இதனால், சிகரத்தில் 1,000 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, இதுவரை 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, குடாங் நகருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. உள்ளூர் கிராமவாசிகளும், மீட்புக் குழுவினரும் பனியால் அடைபட்ட பாதைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடுமையான வானிலை காரணமாக, எவரெஸ்ட் சுற்றுலா பகுதிக்கு நுழைவு சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டு, அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.