வாஷிங்டன்: எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தங்கள் பீரங்கிப் படைகளை குவித்து வருவதால், முழு அளவிலான ராணுவ மோதலுக்கு இது வழிவகுக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், மறுபக்கம், ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த, 2021ல் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்போதிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும், டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, அடிக்கடி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வந்தது. தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வந்ததால், இது பெரிய அளவில் பிரச்னையாக பேசப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இரு நாட்டு எல்லையில், தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இதையடுத்து, டி.டி.பி., தலைவர்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியது. இதற்காக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள்ளும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மோதலாக இது மாறியது. இரு தரப்பில் பலர் உயிரிழந்தனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட மூன்று சுற்று பேச்சுகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகின்றன. குறிப்பாக பீரங்கிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் அபாயம் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 'டுராண்டு கோடு' பகுதி! டுராண்டு எல்லைக்கோடு என்பது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே உள்ள 2,640 கி.மீ., நீளமுள்ள எல்லையாகும். இந்த எல்லை, 1839ம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், அப்போதைய ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கான வெளியுறவு செயலர் சர் மோர்டிமர் டுராண்டும், அப்போதைய ஆப்கன் மன்னர் அமீர் அப்துர் ரஹ்மான் கானும் கையெழுத்திட்டனர். டுராண்டு எல்லைக்கோடு சர்வதேச எல்லையாக செயல்படுகிறது என்றாலும், அது ஆப்கானிஸ்தானால் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இதுவே இன்றைய பதற்றத்துக்கு முக்கிய காரணமாகும். ஆனால், பாகிஸ்தான் இந்த எல்லையை நிரந்தரமான, சட்டப்பூர்வமான சர்வதேச எல்லையாக கருதுகிறது.