வழக்குகளில் மகனுக்கு மன்னிப்பு அமெரிக்க அதிபர் அறிவிப்பு
வாஷிங்டன், குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள தன் மகன் ஹண்டர் பைடனுக்கு, பொது மன்னிப்பு வழங்குவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. துப்பாக்கி வர்த்தகம் தொடர்பாக ஒரு வழக்கும், வரி மோசடி தொடர்பாக ஒரு வழக்கும் அவர் மீது, டலாவரே மற்றும் கலிபோர்னியா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.கடந்த, 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்ற பின், அந்தாண்டு டிசம்பரில் இந்த வழக்குகள் தொடர்பாக ஹண்டர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.துப்பாக்கி வர்த்தக மோசடி வழக்கில், 17 ஆண்டுகள் வரையும், வரி ஏய்ப்பு வழக்கில், 25 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இதைத் தவிர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், பெட்ரோலிய துரப்பண ஒப்பந்தம் மற்றும் சீனாவுடன் சில வர்த்தக ஒப்பந்தங்களும், ஜோ பைடன் பெயரைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்க சட்டங்களின்படி, அதிபராக உள்ள ஒருவர், சிலருக்கு பொது மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், தன் மகன் அல்லது குடும்பத்தாருக்கு அதுபோன்ற எந்த ஒரு சலுகையும், மன்னிப்பும் வழங்க மாட்டேன் என, ஜோ பைடன் பலமுறை கூறியுள்ளார். கடந்த ஜூனில் ஹண்டர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இதை ஜோ பைடன் உறுதிபடுத்தியிருந்தார்.இந்நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலக இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தன் மகன் ஹண்டர் பைடனுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான உத்தரவை, அதிபர் ஜோ பைடன் நேற்று பிறப்பித்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்குகளில் ஹண்டர் பைடனுக்கு எந்த தண்டனை விதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட மாட்டார்.
'நீதி தவறிவிட்டார்'
அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்து கூறியுள்ளதாவது:ஜோ பைடன் நீதி தவறிவிட்டார். தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.கடந்த, 2021 ஜனவரியில் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து தாக்கியதாக, என் ஆதரவாளர்கள் பலர் தற்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இதுபோன்ற பொது மன்னிப்பை அவர் வழங்குவாரா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.