உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் 3ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை விதிக்கப்படும்; டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் 3ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை விதிக்கப்படும்; டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் 3ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை விதிக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அண்மையில், வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா உத்தரவிட்டது. க்ரீன் கார்டு வைத்து இருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.இந் நிலையில், 3ம் உலக நாட்டினர் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறி உள்ளதாவது; தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறியிருந்தாலும், குடியேற்றக் கொள்கை பலரின் ஆதாயங்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் அரித்துவிட்டது. அமெரிக்காவை முழுமையாக மீட்கும் வகையில், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்வை நிரந்தரமாக இடைநிறுத்துவேன்.நம் நாட்டின் குடிமக்களாக இல்லாதவர்களுக்கு அனைத்து சலுகைகள் மற்றும் மானியங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். மேற்கத்திய நாகரீகத்துக்கு பொருத்தமில்லாத, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாட்டினரும் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.இவ்வாறு அதிபர் டிரம்ப் தமது பதிவில் கூறி உள்ளார். 3ம் உலக நாடுகள் எவை என்று எந்த பட்டியலையும் டிரம்ப் வெளியிடவில்லை. எந்த அடிப்படையில் அவர் 3ம் உலக நாடுகள் என்று வகைப்படுத்தி உள்ளார் என்பது பற்றிய தகவல்களும் அவரது பதிவில் இடம்பெறவில்லை. ஜூன் 2025 உத்தரவில், டிரம்ப் நிர்வாகம் சில நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பித்தது. பட்டியலில் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்