உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா

நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் நிர்வாகம்வைகாசி விசாகம் நாள் 22ம் தேதி காலை 7.30 மணிக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தது. மேலும், காலை 9 மணிக்கு ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடை பெற்றது. மாலையில் வெள்ளி கவசத்தால் ஸ்ரீ கார்த்திகேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாள் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, மே மாதம் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, ஸ்ரீ சுப்ரமணிய லட்சார்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஆறுபடை வீடு முருகன் கோவில்களில் நடப்பது போலவே சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ கார்த்திகேயருக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட முருகனை தரிசனம் செய்த பக்தர்கள், 'முருகனுக்கு ஹரோ ஹரா' என கோஷமிட்டனர். பக்தர்கள் ஸ்ரீ கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி, முருகன் கோஷம், ஸ்ரீ முருகப் பெருமானைப் பற்றிப் பல்வேறு பாடல்களை பாடியவாறு காணப்பட்டனர். மஹா தீபாராதனையுடன் இரண்டு நாள் விழா நிறைவடைந்து, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளும் விபிஎஸ்சின் ஆஸ்தான வாத்தியார் சங்கரின் வழிகாட்டுதலோடு, கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் வைபவ் மிஸ்ரா உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கோவிலுக்குச் சென்று, முருகன் அருள் பெற்றனர். இரண்டு நாள் விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்த ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி பெண்கள் பிரிவினர், அடுத்த தலைமுறையினர், ஸ்பான்சர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஆகியோருக்கு கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். - தினமலர் செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !