இறைவனேபண்; இசை மாலை
தில்லி தமிழ்ச் சங்கத்தில் இறைவனே பண் என்ற தலைப்பில் தமிழிசை நிகழ்வு நடைபெற்றது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, தமிழ் சங்க செயலாளர் முனைவர் முகுந்தனின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது. நாதத்தில் இருந்து இறைவன்.. இசை மூலம் இறைவனை உணரலாம் நாம் அடையலாம் என்ற முன்னுரையுடன் " என் சிந்தை நீங்கா இறைவா போற்றி.. எண்ணும் எழுத்தும் இறைவா போற்றி என வணக்கம் சொல்லி அந்த பண்ணின் இசையாய் இறைவனை அப்பர் வரிகளில் தொழுது தொடங்கியது இசை மாலைக்கு ஏற்ற நல்ல முன்னோட்டமாக இருந்தது. சிலப்பதிகாரத்தில் சீரியல் பொழிய என்றதை பாரதி தீதெல்லாம் அகல என்று அறைகூவியதை ஊத்துக்காடு யாரென்ன சொன்னாலும் என்றதை எடுத்துக்காட்டி இசையில் இறைவனை காண நம்மை செளம்யா குரு சரண் தயார் செய்தது அழகு. தொடர்ந்து பாபநாசம் சிவனின் கருணை செய்வாய் கஜராஜமுகனே ( ஹம்சத்வனி) . இதுவே நல்ல தருணம்.. என் உள்ளத்தில் உனது சரணார விந்தத்தை பதித்து அன்பருள்வாய் என்று விண்ணோர் வணங்கும் அந்த மாதவன் மருகனை போற்றி வணங்கி அதே கருணை செய்வாய் இடத்தில் ஸ்வரம் அமைத்து பாடியது அருமை. அடுத்து ஆசிரியர் தன பாண்டியன் எழுதிய புத்தகம் புதிய ராகங்கள் பற்றிய முன் அறிவிப்பு. அவர் படைத்த நாத ரஞ்சனியில் அமைந்த தமிழ் தாயை போற்றிய பாடல். இங்கு தாய்மொழி வழியாக இறைவனை கண்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார். ஆராவமுதே தமிழே தேனாய் மொழியே நீ வாழ்வாய் நம்மை ரசிக்க வைத்தது. தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கில் இருந்து தாள் சேர்தல் கடிதினிதே .. தொல் மாண் துழைய் மாலையானை தொழல் இனிதே.. முன் துறப்பேணி முகம் நான்குடையானை சென்றமர்தல் இனிதே என்று முப்பெரும் தெய்வங்களுக்கு நாதாபிஷேகம் செய்வித்து "நம்பிக் கெட்டவர் எவரையா"என்று மீண்டும் பாபநாசம் பாடலை பாடி அந்த அம்புலி அணிந்த ஜடாதரனை சபையில் நடமாட வைத்தார். தமிழிசையில் பாரதிக்கு இடமுண்டல்லவா. அவரின் ஆசை முகம் மறந்து போச்சே. நம்மை மெய்மறக்கச் செய்தது.பக்க வாத்தியங்களின் பக்குவமான பங்களிப்பில் பாட்டின் சுவை பலமடங்கு கூடுதலாக மிளிர்ந்தது. மீண்டும் பாபநாசம் சிவனின் ஆண்டவனே உன்னை நம்பினேன் என்று அந்த குஞ்சித பாதனிடம் நம்மை கரையேற வழி வேண்டிக்கொண்டு இசை வழி மயிலை நாதர் தரிசனம் காணச் செய்த செளம்யா குழுவினருக்கு ஒரு சபாஷ். தேசிய கவிஞன் பாரதியின் "மோகத்தை கொன்று விடு" மிக அரிதாக கேட்கும் பாடல்.சிந்திக்க வைக்கும் வரிகளை மெய்மறந்து பாடி நம்மை அந்த சுதந்திர தாகத்தினுள் செலுத்தி ரசிக்க வைத்தார் . தமிழே அழகு. அழகே தமிழ். இறுதியில் திருப்புகழ் வரிகளுடன் இசை மாலையை நிறைவு செய்தார். இறைவனே பண்.பண்ணே இறைவன் என்பதற்கு தாய்மொழி தமிழ் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி இசை மாலையை இசை நுணுக்கங்களை தாண்டி இறை அனுபவத்தை உணர வைத்தார். கர்நாடிக் கிடாரில் அபய் நயம் பள்ளி, மிருதங்கம் அபிஷேக் அவதானி, கஞ்சிரா விஸ்வப்பிரசன்னா அபாரமாக வாசித்து இசை மாலையை இனிமையாக்கினர். முன்னாள் தமிழ் சங்க தலைவர் இந்து பாலா , இசை ஆர்வலர் மீனா வெங்கி இசைமாலைபற்றி வாழ்த்திப் பேசினர். கலைஞர்கள் தமிழ்ச்சங்கம் சார்பில் கெளரவிக்கப்பட்டனர் நிகழ்வுகளை தமிழ்ச்சங்கம் உமா வெங்கட் தொகுத்து வழங்க சுந்தரேசன் நன்றி உரையுடன் இசைமாலை நிறைவுபெற்றது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி