உள்ளூர் செய்திகள்

உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ குரு பெயர்ச்சி நவக்கிரஹ மஹாயக்ஞம்

புதுதில்லி : இராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ குரு பெயர்ச்சி நவக்கிரஹ மஹாயக்ஞம் நடைபெற்றது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சஞ்சாரம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. நவ கிரகங்களில் முக்கிய கிரகமும் சுபகிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாடப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன.காலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சாந்தி பரிஹார சங்கல்பம், நவக்கிரஹ கும்ப ஸ்தாபனம், மஹான்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் நடைபெற்றது. ரித்விக்குகள் இதில் திரளாக பங்கேற்று பாராயணம் செய்தனர். இதையடுத்து குரு ப்ரீத்தி (நவக்கிரஹம்) மஹாயக்னம், பூர்ணாஹூதி, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ குரு பகவான் மற்றும் பிற கிரஹங்களுக்கு பூர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு, ஆராதனை மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !