உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 90வது ஜெயந்தி

புதுதில்லி : அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 90வது ஜெயந்தி உத்ஸவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியார் குரு மற்றும் பீடாதிபதி ஆவார். சுப்ரமணியம் மகாதேவ ஐயர், அவருக்கு முன்னோடியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியால் (ஸ்ரீ மஹா பெரியவா) அவருக்குப் வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அவருக்கு 22 மார்ச் 1954 அன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு, குரு சந்திரசேகர் தலைமையில், விக்னேஸ்வர பூஜையுடன் ஜெயந்தி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. 8.30 மணிக்கு மஹன்யாஸ ஜபம், அதைத் தொடர்ந்து, ஏகாதச ருத்ர பாராயணம் நடைபெற்றது. ரித்விக்குகள் திரளாக இதில் பங்கேற்று பதினொரு ஆவர்த்தி ஏகாதச ருத்ர பாராயணம் செய்தனர். கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. பிறகு, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, புஷ்பாஞ்சலி நடைபெற்றன. பிள்ளையார், தேவி காமாட்சி சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தோடகாஷ்டகம் சொல்லி, தீபாராதனை காட்டப்பட்டு நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மீக பங்களிப்பு குறித்து ஆலய நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மாலை உபநிஷத் வேத பாராயணம் மற்றும் பாதுகை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி திருவுருவப் படத்தை மேளதாளங்கள் முழங்க ஏந்தியவாறு கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். உச்ச நீதிமன்றம் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இதில் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திர் நிர்வாகிகள் செய்து இருந்தனர். - நமது செய்தியாளர் எம்,வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !