தலைநகர் ரோகிணியில் திருவிளக்கு பூஜை
புதுடில்லி : ஆடி மாதத்தை முன்னிட்டு, ரோகிணி செக்டார் 16-ல் அமைந்துள்ள, மா ஆத்ய சக்தி தாம் மந்திரில், திரு விளக்கு பூஜை இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை, ரோகிணி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். திருவிளக்கு பூஜை வழிபாடு, இந்து மதத்தில் இடம் பெறும் ஒரு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடாகும். காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பரசுராம சாஸ்திரிகள் இதனை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ ருத்ராபிஷேகம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீப ஆராதனை மிக விமரிசையாக நடந்தது. உலக நன்மைக்காகவும், பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவும், போதிய பருவமழை வேண்டியும், சுமங்கலி பெண்கள் எராளமானோர் பங்கேற்று தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஊதுபத்தி, கற்பூரம் எடுத்து வந்து குத்துவிளக்கு ஏற்றி பூஜை வழிபாடு செய்தனர். இதையடுத்து, வடு, கன்யா, தம்பதி பூஜைகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ராஜேஷ் சாஸ்திரிகள் நடத்தி வைத்த பகவதி சேவையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்