உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / தோட்டக்கலையில் ஆர்வமுள்ள 74 வயது தமிழ் மூதாட்டி

தோட்டக்கலையில் ஆர்வமுள்ள 74 வயது தமிழ் மூதாட்டி

தன் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வீட்டின் மாடியில் வளர்ப்பது மட்டுமின்றி, அக்கம் பக்கத்து வீட்டினருக்கும், கோவில்களுக்கும் வழங்கி வருகிறார் 74 வயது பெண். பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் மாலா ராகவன். இவரின் வீட்டின் அருகில் சென்றாலே கமகமக்கும் பூக்கள், பழங்களின் நறுமணம் வீசும். தினமும் காலை 6:30 மணிக்கு எழுந்து ஒரு கையில் காபி கோப்பையுடன், தன் வீட்டின் மாடியில் வளர்த்து வரும் டிராகன் பழம், கற்றாழை, கறிவேப்பிலை, மல்லிகை, செம்பருத்தி உட்பட நுாற்றுக்கணக்கான செடிகளுக்கு 'குட் மார்னிங்' சொல்லிவிட்டு, அவைகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றுகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னையில் உள்ள எங்கள் வீட்டின் தோட்டத்தில் பூக்கள், பழங்கள், காய்கறி செடிகளை என் தாயார் வளர்த்து வந்தார். எனக்கு 20 வயதாக இருக்கும் போது, செடிகளின் மீது காதல் மலர்ந்தது. 50 ஆண்டு திருமணத்துக்கு பின், பெங்களூரு வந்து விட்டேன். இங்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. முதலில் தோட்டம் அமைத்து, செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்த பின், ஓய்வு நேரத்தை தாவரங்கள் வளர்ப்பில் செலவழிக்கிறேன். தரை தளத்தில் வெற்றிலை கொடிகள், காபி செடிகளால் அடர்த்தியாக உள்ளது. இதனால் நடக்க இடம் இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு முன், என் வீட்டு மொட்டை மாடியில் அமைத்தேன். பழங்கள், காய்கறிகளை சாப்பிட குரங்குகள் வருவதால், அதை தடுக்க மொட்டை மாடி முழுதும் தடுப்பு வேலி அமைத்து உள்ளேன். வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்களை வெளியே வாங்கி பல ஆண்டுகளாகின்றன. பூசணி, அவரைக்காய், கீரைகள், மிளகாய், தக்காளி என அனைத்து காய்கறிகளும் இங்கேயே வளர்வதால், வெளியே காய்கறிகள் வாங்குவதில்லை. அத்துடன், இங்கு விளையும் காய்கறிகள் அண்டை வீட்டினருக்கும் வழங்கிறேன். கடந்த மாதம் 15 கிலோ எடை உள்ள ஆறு பூசணிக்காயை, அருகில் உள்ள கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கினேன். நீரிழிவால் பாதிக்கப்பட்ட நான், தினமும் வெயிலில் மூன்று மணி நேரம் செடிகளை கவனித்து கொள்வதால், வைட்டமின் 'டி3' அதிகரித்து, எனக்கு தேவையான பலத்தை தருகின்றன. பொழுது போக்காக 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது, இன்று என் வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி உள்ளது. தாவரங்களுக்கு நீங்கள் துாய ஆற்றல், அன்பை கொடுக்கிறீர்கள்; அவை அமைதியை திருப்பி தருகின்றன. அண்டை வீடு பூக்கள், பழங்கள் வளர்ப்பதால் என் வீடு, வீட்டின் அருகில் இருப்பவர்களும் இதன் நறுமணத்தை உணருகின்றனர். என் செயலை பார்த்த, அண்டை வீட்டினர் தங்களுக்கும் தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளது என்று கூறுவர். அவர்களுக்கு டிராகன் பழங்களின் துண்டுகள், செடிகளை குறைந்த விலையில் வழங்குகிறேன். தோட்டக்கலை அனுபவத்தில் சவால்கள் தவிர்க்க முடியாதவை. சமீபத்தில் கலப்பின மற்றும் அழகான வண்ணங்களை கொண்ட 50க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் காய்ந்தன. என்ன காரணத்தால் அவைகள் காய்ந்தன என்று தெரியவில்லை. இதனால் நீண்ட நாட்கள் மன உளைச்சலுக்கு உள்ளானேன். இந்த இழப்பில் இருந்து இன்னும் மனதளவில் மீளவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தான் வளர்க்கும் செடிகளுடன் மாலா ராகவன். (அடுத்த படம்) வீட்டில் வளர்க்கப்படும் செடிகள், பழ வகைகள். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை