பார்வையற்றோருக்கு விழியாக வழிகாட்டும் அஸ்வினி அங்கடி
பல்லாரி மாவட்டம், செல்லகுர்கியை சேர்ந்தவர் பிரகாஷ் அங்கடி - வேதவதி அங்கடி. இவர்களின் மகள் அஸ்வினி அங்கடி. பிறவியிலேயே பார்வையற்றவர். பிரகாஷின் உறவினர்கள், பார்வையற்ற குழந்தையை வைத்து கஷ்டப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.ஆனால், பெற்றோரோ, அதை பொருட்படுத்தாமல், வழக்கமாக குழந்தைகளை வளர்ப்பது போன்றே வளர்த்தனர். மகள் கல்விக்காக பெங்களூரில் பார்வையற்றோருக்கான ஸ்ரீரமண மஹரிஷி அகாடமியில் சேர்த்தனர்.இங்கு சிறப்பாக கல்வி பயின்ற அவர், என்.எம்.கே.ஆர்.பி., கல்லுாரி, மஹாராணி கல்லுாரிகளில் படிப்பை முடித்து, பட்டதாரியானார்.அதை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார். ஆனால், அவருக்கு அப்பணியில் மனநிறைவு கிடைக்கவில்லை.இப்பதவியை ராஜினாமா செய்த அவர், மாற்றுத் திறனாளியான லியோனர்ட் செஸ்சையரின் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் இணைந்தார்.இதில் இருந்தபடியே, மாற்றுத் திறனாளிகளுக்காக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். தனது 23 வயதில் மாற்றுத்திறனாளிகள், நலிந்தோருக்கு கல்வி கற்பித்தல் ஆகிய துறைகளில் சமூக பணிகளுக்காக பல விருதுகள் பெற்றார்.ஐக்கிய நாடுகள் சபையில், 2013ல், 'மலாலா தினம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கல்விக்கான சமூக சேவையில் ஈடுபட்ட அஸ்வினி அங்காடிக்கு 'உலகளாவிய கல்விக்கான இளைஞர் துணிச்சல் விருது' கிடைத்தது.இது குறித்து, அவர் கூறியதாவது:இக்கூட்டத்தில் எனக்கு இரண்டரை நிமிடம் பேச அனுமதி வழங்கப்பட்டது. என் வாழ்க்கை குறித்து பேசினேன்.இதை கேட்ட தலிபான்களை எதிர்த்து கேள்வி கேட்ட மலாலா கூட, கண் கலங்கி உள்ளார். நான் பேசி முடித்ததும், அவரின் தாயார், என்னை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்தார். என்னுடன் மலாலா போட்டோ எடுத்து கொண்டார்.அப்போது அவர், 'இன்றைய தினம் மலாலா தினம் என்று அழைக்க கூடாது; அஸ்வினி தினம்' என்று அழைக்க வேண்டும் என்றார். மாற்றுத் திறனாளிகள் கல்வி பயில, 2014 பிப்ரவரியில் அஸ்வினி அங்காடி நல அறக்கட்டளை துவக்கினேன். அறக்கட்டளையின் பெரும்பாலான போர்டு உறுப்பினர்கள் பார்வையற்றவர்கள்.எங்கள் அறக்கட்டளையின் துணை நிறுவனமாக 2018ல், 'பெலக்கு அகாடமி' துவக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கென கலை, கலாசாரம், விளையாட்டு போன்றவை கற்றுத் தரப்படுகிறது.எங்கள் அகாடமியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் உணவு, சீருடை, சுகாதாரம், கல்விக்கான பொருட்கள் என அனைத்து விதத்திலும் உதவி வருகிறோம். அதுமட்டுமின்றி, தையல், பிளாஸ்டிக் கூடை பின்னுதல், சமையல் என பல பயிற்சி அளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு 080 - 2853 5559 என்ற தொலைபேசியிலும்; ashwiniangaditrust.org என்ற இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.28_Article_0001பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சதுரங்கம் விளையாட கற்றுத்தரும் அஸ்வினி அங்கடி