பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஹளே சந்தாபுராவில் டிசேல்ஸ் அகாடமி பள்ளிக்கு, குழந்தைகள் தினத்தன்று, 'மிஸ் ஐரீஸ்' என்ற புதிய ஆசிரியை வந்துள்ளார். இவரை பெற்றோருக்கும், மாணவ - மாணவியருக்கும், ஊழியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் அறிமுகம் செய்து வைத்தனர். புதிய ஆசிரியைக்கு அபார வரவேற்பு அளித்த மாணவர்கள், 'மிஸ் ஐரீஸ், ரோபோ மிஸ்' என, கைத்தட்டி கூச்சலிட்டு குஷி அடைந்தனர். மேக்கர்ஸ் லேப் குழந்தைகள் தின விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்று உரையாற்றியது மனித ஆசிரியை அல்ல, அவர் ரோபோ ஆசிரியை. மாணவர்களுக்கு பாடம் நடத்த, பள்ளி நிர்வாகத்தினர், ரோபோ ஆசிரியையை நியமித்துள்ளனர். இது, கேரளாவின் மேக்கர்ஸ் லேப் தயாரித்த, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரோபோவாகும். இதற்கு 'ஐரீஸ்' என, பெயர் சூட்டியுள்ளனர். பிங்க் நிற பார்டர் கொண்ட பச்சை நிற சேலை, அதற்கு பொருத்தமான ரவிக்கை அணிந்து, பெண் ஆசிரியை போன்று, அழகான தோற்றம் அளித்த ஐரீஸ், இரு கைகளை கூப்பி, அனைவருக்கும் நமஸ்காரம் என, தெளிவான கன்னடத்தில் கூறியது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரோபோ ஆசிரியை உரையாற்றிய பின், இவரிடம் கேள்விகள் கேட்கும்படி கோரப்பட்டது. அதன்பின் மாணவ - மாணவியர் அறிவியல், கணிதம், சமூக அறிவியல், பொது அறிவு தொடர்பான கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் ரோபோ ஆசிரியை சரியான பதில்களை கூறினார். கேள்விகள் வந்த திசையில் கழுத்தை திருப்பி, கண்களை சிமிட்டி பொறுமையுடன் கேட்டு கொண்டு, சரியான பதில் கூறி அசத்தினார். தமிழ், கன்னடம் ரோபோ ஆசிரியை தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் உட்பட ஏராளமான மொழிகளில் புலமை உள்ளவர். நவம்பர் 17ம் தேதி முதல், மிஸ் ரோபோ ஐரீஸ் அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த துவங்கியுள்ளார். அவருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் 'ஒரு பீரியட்' ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சிறார்களின செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப திறனை அதிகரிக்கவும், கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், மிஸ் ஐரீஸ் வரவழைக்கப்பட்டார். இது முதல் ரோபோ ஆசிரியையாகும். வழக்கமான கல்வியுடன், புதிய தொழில்நுட்பமும் அதிகரித்து உள்ளதால், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும். கணிதம், அறிவியல், வரலாறு, அரசியல், தற்போதைய உலக நடப்பு என, எந்த கேள்வி கேட்டாலும், மிஸ் ஐரீஸ் அசராமல் பதில் அளிக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது - நமது நிருபர் - .