| ADDED : நவ 21, 2025 06:10 AM
- நமது நிருபர் -: வில் அம்பு விளையாட்டில், ஒரு ஏழை மாணவி, மாநில அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். கல்யாண கர்நாடகா பகுதியின் யாத்கிர் மாவட்டம் சுராபுராவின் தேவிபூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவம்மா, 22. ஏ.டி.ம்.இ., பொறியியல் கல்லுாரி மாணவியான இவர், வில் அம்பு விளையாட்டில் மாநில அளவில் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் தசரா விளையாட்டு போட்டியில், தங்கம் வென்று, மாவட்டத்துக்கும், கல்லுாரிக்கும் பெருமை சேர்த்துள்ளார். 2023 முதல் மாநிலம் அளவிலும், வெளி மாநிலங்கள் அளவிலும் நடக்கும் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருகிறார். பயிற்சி துவங்கிய முதல் ஆண்டே, தசரா விளையாட்டில், நான்காவது இடத்தை பிடித்தார். தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியால், அடுத்தாண்டு 2024 தசரா வில் அம்பு விளையாட்டில் இரண்டாவது இடத்தை பிடித்தார். கோவாவில் நடந்த 'ஓபன் கேம்ஸ்' போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். நடப்பாண்டு உடுப்பியில் நடந்த 'கர்நாடகா ஒலிம்பிக் விளையாட்டு' போட்டியில், இரண்டாவது இடத்தையும்; மண்டல அளவிலான தசரா போட்டியில் முதல் இடத்தையும் பெற்றார். அத்துடன், மாநில அளவிலான முதல்வர் கோப்பை வில் அம்பு போட்டியில், 50 மீட்டர் இந்திய ஒலிம்பிக் சுற்றில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.