உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / கராத்தேவில் சாதிக்கும் கோலார் சிறார்கள்

கராத்தேவில் சாதிக்கும் கோலார் சிறார்கள்

கராத்தே எனும் தற்காப்பு கலையில், கோலாரின் மூன்று சிறார்கள் சாதனை செய்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். நடப்பாண்டு பிப்ரவரி 8ம் தேதியன்று, தமிழகம் சென்னையில், 'ஒர்ல்டு கராத்தே மாஸ்டர் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது. இதில் இந்தியாவின், பல்வேறு மாநிலங்களின் கராத்தே வீரர்களுடன், வெளி நாடுகளில் இருந்தும் கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் மொத்தம் 2,999 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் கோலார் நகரின் புரூஸ்லீ கராத்தே பள்ளி மாணவர்களான சியானா ஜான், கவுஷிக் வினோத், சீனிவாஸ் திறமையாக விளையாடி வெற்றி பெற்றிருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கான விருது சான்றிதழ் லண்டனில் இருந்து வந்துள்ளது. கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம், விருது பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. போட்டியின் 30 நிமிட கால அவகாசத்தில், ஒரு சிறு தவறும் செய்யாமல் விளையாட வேண்டும். போட்டி விதிமுறைப்படி 30 நிமிடங்களில் சிறப்பாக விளையாடுவோர், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவர். அதே போன்று, சென்னையில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற, கோலாரின் சியானா ஜான், கவுஷிக் வினோத், சீனிவாஸ் சாதனை செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர்; புரூஸ்லி கராத்தே பள்ளியில் கராத்தே பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு பயிற்சியாளர் மாஸ்டர் சீனிவாஸ் பயிற்சி அளிக்கிறார். இவருக்கும் 'உலக சாதனை சான்றிதழ்' விருது கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப்பில், 50 க்கும் அதிகமான பயிற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் நால்வருக்கு உலக சாதனை விருது கிடைத்துள்ளது. இவர்களில் மாஸ்டர் சீனிவாசும் ஒருவர் ஆவார். திரைப்பட நடிகரான சீனிவாஸ், கடந்த 30 ஆண்டுகளாக கராத்தே பயிற்சியாளராக இருக்கிறார். கராத்தே என்பது உடலையும், மனதையும் வலுப்படுத்தும், தற்காப்பு கலையாகும். இதை கற்று கொண்டால், தற்காப்புடன், ஆரோக்கியமும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை