மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு ரங்கோலி ஓவிய போட்டி
09-Jul-2025
தங்கவயலில் பல கலைஞர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். தங்கச் சுரங்க நிறுவன ஓவியராக இருந்த தந்தை செல்வராஜ் வழியில், 10 வயதிலேயே ஓவியம் தீட்ட துவங்கியவர் தான் அவரது மகன் நந்தகுமார், 65. இவர், 1989ல் மும்பையில் உள்ள பைன் ஆர்ட்ஸ் கல்லுாரியில் 'டிப்ளமா' பயின்றவர்.சாம்பியன் ரீப்பில் ஆங்கிலேயர் பண்டகசாலை பகுதியில் வசித்து வருகிறார். தங்கச் சுரங்கத்தின் ஓவியராக 21 ஆண்டுகள் பணியாற்றியவர். இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர்; மூவரும் பட்டதாரிகள். இவரின் 'இளவல்' எஸ்.ஸ்ரீகுமார், 'கோலார் கோல்ட் பீல்ட்' எனும் வரலாற்று நுாலை, 900 பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை 'பெங்குயின் நிறுவனம்' வெளியிட்டுள்ளது. ஆயில் பெயின்ட்
ஓவியத்துக்கு ஓய்வே கிடையாது என கூறும் இவர், கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் துாரிகையால் 'ஆயில் பெயின்ட்' மூலம் வரைந்து வருகிறார்.தான் வரையும் ஒவ்வொரு பாரம்பரிய கோவில் கட்டடம், இயற்கை காட்சிகளில் காணப்படும் தத்ரூபமே, தனக்கு கிடைத்து வரும் அங்கீகாரம். தன் ஒவ்வொரு படைப்பும் வியாபார ரீதியாக இல்லாமல், ஆத்ம திருப்திக்காக தீட்டப்பட்டவை என்கிறார்.சுரங்க விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு அவசியத்தை ஓவியம் மூலம் விளக்கியவர். பாலக்காடு முதல் மாரி குப்பம் வரையில் சுரங்க நிறுவனத்தின் அனைத்து இடங்களிலும் இவரது கை வண்ணத்தை காணலாம். இவரின் படைப்புகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாங்காக் உட்பட அரபு நாடுகளிலும் பெருமை பெற்றுள்ளன. சித்ர சந்தை
கர்நாடகாவில் பெங்களூரில் நடத்தப்படும், 'சித்ர சந்தை'யில், 23 ஆண்டுகள் தனது ஓவியங்களை இடம் பெற செய்து வருகிறார். மும்பை, புதுடில்லி, கொல்கட்டா, தமிழகத்தின் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடந்த ஓவிய கண்காட்சிகளிலும் இவரின் துாரிகைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஹிந்து கோவில்களை வண்ண ஓவியங்கள் மூலம் உயிர்ப்பித்து உள்ளார். அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் காண கண் கோடி வேண்டும். இவர் கை வண்ணத்தில் இடம் பெறாத கோவில்களே இல்லை எனலாம். இந்த ஓவியங்கள் அனைவரையும் சொக்க வைக்கும்.ஓவிய சாதனைக்காக கலிபோர்னியா பல்கலைக்கழகம், 'முனைவர்' பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இன்று வரை ஓய்வின்றி, ஓவியத்தையே தன் உலகமாக நேசிக்கிறார். தன் வீட்டையும், கலை வாழும் கோவிலாக அமைத்துள்ளார் - நமது நிருபர் -.
09-Jul-2025