உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / தலைப்பாகைகளுக்கு பெருமை சேர்க்கும் சீதாராமா

தலைப்பாகைகளுக்கு பெருமை சேர்க்கும் சீதாராமா

ஆகஸ்ட் மாதம் வந்தால், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உட்பட பண்டிகைகள், சிறப்பு நாட்கள் வருகின்றன. இந்த நாட்களில், சமுதாய பணிகள் செய்தவர்களை கவுரவிப்பது வழக்கம். கவுரவிப்பது என்றவுடன், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது மைசூரு தலைப்பாகை. கவுரவத்தை ஏற்கும் பலரும், தங்களுக்கு வழங்கப்பட்ட பழங்களை பயன்படுத்துவர்; சால்வைகளையும் பயன் படுத்துவர். ஆனால் தலைப்பாகையை என்ன செய்வது என, தெரியாமல் குழப்பமடைந்து, மூலையில் வீசுவோரே அதிகம். அதன்பின் அது குப்பை கூடைக்குச் செல்லும். ஆனால் தொழிலதிபர் சீதாராமா என்பவர், தனக்கு கிடைத்த தலைப்பாகைகளை, அழகாக அடுக்கி வைத்துள்ளார். தட்சிணகன்னடா மாவட்டம், கடபாவின் சவனுார் கிராமத்தில் வசிக்கும் சீதாராமா, பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்துகிறார். கல்வி, ஆன்மிகம், கூட்டுறவு துறைகளில் பல சாதனைகளை செய்து, அடையாளம் காணப்பட்டவர். பொது சேவைகளிலும் ஆர்வம் உடையவர். இவரது சேவையை பாராட்டி, பல விருதுகள் கிடைத்துள்ளன. விருதுகளுடன் தலைப்பாகைகளும் அணிவிக்கப்பட்டன. இந்த தலைப்பாகைகளை அவர் வீசியெறியவில்லை. பல ஆண்டாக பொக்கிஷம் போன்று பாதுகாக்கிறார். இதற்காகவே தன் வீட்டின் ஒரு அறையை பயன்படுத்துகிறார். தனி ஷோகேஸ்கள் செய்து, தலைப்பாகைகளை அழகாக அடுக்கி வைத்து, கண்காட்சியாக மாற்றியுள்ளார். ஆயிரக்கணக்கான தலைப்பாகைகள் இவரது சேகரிப்பில் உள்ளன. இவரது வீட்டுக்கு வருவோர், விதவிதமான தலைப்பாகைகளை பார்த்து ரசிக்கின்றனர். இது பற்றி கேள்விப்படும் பலரும் இவரது வீட்டுக்கு வந்து, நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட தலைப்பாகைகளை பார்க்கின்றனர். தங்களை கவுரவிப்பதற்காக அணிவிக்கப்பட்ட தலைப்பாகைகளை, பயன் இல்லையென, வீசி எறிவோருக்கு இடையே, தனக்கு அணிவிக்கப்பட்ட தலைப்பாகைகளை பாதுகாப்பதன் மூலம், தன்னை கவுரவித்தவர்களை கவுரவிக்கும் சீதாராமா, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். இவரால் தலைப்பாகையும் மதிக்கப்படுகிறது. -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ