அரசு பள்ளியை தத்தெடுத்து கல்வி கற்பிக்கும் மூன்று நண்பர்கள்
பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தினருக்காக அரசு, பள்ளிகளை துவக்குகிறது. ஆனால் போதிய ஆசிரியர் பற்றாக்குறையாலும், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயில வேண்டும் என்பதற்காக பெற்றோர் சேர்த்து விடுகின்றனர். அறக்கட்டளை
கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து மூன்று நண்பர்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு சாரா தொண்டு நிறுவனமான 'டிராங்குல் நல அறக்கட்டளை' துவங்கி, அரசு குப்பாலாலா உயர் துவக்கப் பள்ளியை தத்தெடுத்து, மாணவர்களுக்கு கல்வி என்ற ஆயுதத்தை பயிற்றுவித்து வருகின்றனர்.இங்கு படித்த மாணவர்கள் பலரும் தற்போது பொறியாளர்கள், எம்.பி.பி.எஸ்., டாக்டர் உள்ளிட்ட படிப்புகளை படிக்கின்றனர்.அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான என்.சீனிவாசன் கூறியதாவது:மும்பையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான அரசு குடியிருப்பு வீட்டில், நான் வளர்ந்தேன். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தேன். சிறு வயதிலேயே கல்வியின் முக்கியத்துவம் அறிந்து கொண்டேன்.ஆனாலும் விதி என் வாழ்க்கையில் விளையாடியது. எனக்கு 17 வயது இருக்கும்போது, என் தந்தை உயிரிழந்தார். இதனால் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற என் கனவு நொறுங்கியது.வீட்டின் பொருளாதாரத்துக்காக வேலைக்கு செல்ல துவங்கினேன். என் 26வது வயதில் மத்திய கிழக்கு நாட்டில் பணிக்கு சென்றேன். பல நிறுவனங்களில் பணியாற்றி, என் 40வது வயதில் கார் நிறுவனம் ஒன்றில் மதிப்புமிக்க பதவியை பெற்றேன். நட்பு
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், மனதுக்குள் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. இங்கேயே தங்கி பணம் சம்பாதிக்கலாமா அல்லது நம் நாட்டுக்கு சென்ற, அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்யலாமா என்ற நினைத்து கொண்டே இருந்தேன்.என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, பெங்களூரு திரும்பினேன். இங்கு நான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சீனிவாசன் பத்மநாபராவ், ஸ்ரீராம் ஆகியோரின் நட்பு கிடைத்தது.இந்த அமைப்பின் இணை நிறுவனரும், அறங்காவலருமான ஸ்ரீராம், கலிபோர்னியாவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின், என்னை போலவே, பெங்களூரு திரும்பினார். மற்றொரு இணை நிறுவனரும், ஆலோசகருமான சீனிவாசன் பத்மநாபராவ், கோல்கத்தாவில் பணியாற்றியவர்.மூவரும் டென்னிஸ் விளையாடும்போது, இந்த அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். அதன்படி அறக்கட்டளையை துவக்கி, அரசு பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்தோம்.முதலில் மாணவர்கள் இடையே குழுவை உருவாக்கினோம். நாங்கள் வகுப்புறைகளை புதுப்பித்து, நுாலகம், கழிப்பறை, தோட்டம், கணினி ஆய்வகம் ஆகியவற்றை கட்டினோம். மாணவர்கள் கல்வி பயில, ஆர்வத்தை ஏற்படுத்தும் சிறந்த இடமாக மாற்றினோம். நியமனம்
பள்ளி கல்வி இயக்குனராக அகிலா ராதாகிருஷ்ணன், தகுதி வாய்ந்த எட்டு ஆசிரியர்கள், தன்னார்வலர்கைளை நியமித்தோம்.மாணவர்களின் சந்தேகங்களுக்கு, தன்னார்வலர்கள் உதவுகின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் போது பள்ளி நேரத்துக்கு பின்னரும், கூட பாடம் சொல்லித்தருகின்றனர். இதனால் பள்ளியை விட்டு பாதியில் நிற்போரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.மாணவர்கள் இடையே பொறுப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் குழு உள்ளது.முன்னாள் மாணவர்களுக்காக பள்ளிக்கு பிந்தைய திட்டத்தை துவக்கினோம். பகுதிநேர ஆசிரியர்கள், வார இறுதியில் 8 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை 73 மாணவர்கள் இருந்த இப்பள்ளியில், 15 ஆண்டுகளில் 260 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இவர்களின் செயலை பாராட்ட நினைப்போர், 96111 40648 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.