பங்கார்பேட்டை பானி பூரி
தங்கவயல், கோலார், மாலுார், பெங்களூரு, மைசூரு மட்டுமின்றி நாடெங்கிலும், 'பானி பூரி' என்றாலே பேமஸாக பேசப்படுவது பங்கார்பேட்டை பானி பூரி தான்.இது, இந்தியாவில் மட்டுமல்ல துபாய் உட்பட அரபு நாடுகளிலும் பங்கார்பேட்டை பெயரில் பானி பூரி கடைகள் உள்ளன. சிறுவர்கள் முதல் முதியோர் வரை பலரும், மாலை நேர ஸ்னாக்ஸ் எனும் சிற்றுண்டி, நொறுக்கு தீனியாக பிரியமுடன் வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.எங்கு தேடியும்... பங்கார்பேட்டையில் 50க்கும் அதிகமான 'பானி பூரி சாட்ஸ் கடைகள்' பல்வேறு பெயர்களில் உள்ளன. ஆனால் பங்கார்பேட்டை பானிபூரி கடையை பங்கார்பேட்டையில் தேடிப்பார்த்தாலும் பார்க்க முடியவில்லை.ஆனால், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலும் பங்கார்பேட்டை பானி பூரி கடைகள் உள்ளன. இது, பங்கார்பேட்டை நகருக்கு கிடைத்த பெருமை என அதன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர்த்தக ரீதியாக பங்கார்பேட்டையில் பல வகையான கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். அவர்களின் உணவு பழக்க வழக்கங்களில் பானி பூரியை சாப்பிடுவதும் கலாசாரமாகவே இருந்தது.வட மாநிலத்தவரின் சுவைக்கேற்ப பானிபூரியை தயாரித்து அவர்களின் கடைகளை தேடிச்சென்று, விற்பனை செய்து வந்தனர். பின்னர், அவர்களே, பானி பூரி கடையை ஏற்படுத்தி வியாபாரம் செய்ய துவங்கினர். வடமாநிலத்தவர் மட்டுமின்றி பலரும் சாப்பிட்டனர்.பட்டப்பெயர்இந்த வகையில், தங்கள் வியாபாரத்தை செய்ய தங்கவயல், மாலுார், கோலார், பெங்களூரு, மைசூரு வரை குடியேறினர். பங்கார்பேட்டை பானி பூரியின் விற்பனை பரவியது. நாளடைவில், பானி பூரி என்றாலே, பங்கார்பேட்டை பெயரை சூட்டி வியாபாரம் செய்து வருகின்றனர்.ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, தலப்பாக்கட்டி பிரியாணி போல, பானிபூரிக்கு பங்கார்பேட்டை என்பதை அடைமொழியாக ஆக்கினர். சுவைஞர்கள் மத்தியில் பானி பூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.வகை வகையாய்...பானி பூரி கடைகளில் மசாலா பூரி, தாய் பூரி, கச்சோடி, பேல் பூரி, நிப்பட் மசாலா, நிப்பட் பேல், முறுக்கு பேல், போட்டி மசாலா, பன் மசாலா, கோபி மஞ்சூரியன் என வித விதமாக ஸ்னாக்ஸ் தயாரித்து விற்கப்படுகின்றன. பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.பானி பூரியை சுத்தமான கோதுமை மாவில் செய்கின்றனர். இதனுடன் புதினா, சீரகம், மிளகுத்துாள், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி, பூண்டு, ஜாதிக்காய் ஆகியவையும் சேர்க்கின்றனர். மும்பை, புனே, டில்லி உட்பட வட மாநிலங்களில் பானிபூரியில் முக்கியமாக இடம் பெறுவது உருளைக் கிழங்கு. ஆனால் தென்னிந்தியாவில் உருளைக்கிழங்குக்கு மாற்றாக பச்சைப் பட்டாணியை பயன்படுத்துகின்றனர். உருளை கிழங்கால், வாயு கோளாறு ஏற்படுவதாக சிலர் கருதுவதால், பட்டாணி பயன்படுத்துகின்றனர்.