200 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி தேவி கோவில்
ஹாசன் மாவட்டம், பிக்கனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சவுடேஸ்வரி தேவி கோவில். இந்த கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. சவுடேஸ்வரி தேவியை புரதம்மா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோவிலின் கட்டடக்கலை ஹொய்சாளா, திராவிட கட்டடக் கலையை பிரதிபலிக்கிறது. இதை பறைசாற்றும் வகையில், கோவிலில் உள்ள துாண்கள், சிற்பங்கள் உள்ளன. சவுடேஸ்வரி தேவியின் அருளை பெறுவதற்காக தினமும் நுாற்றுக்கணக்கிலான பக்தர்கள் வருகின்றனர். தேவியிடம் பலரும் குழந்தை வரம், திருமண வரம், நோய் இல்லா வாழ்க்கைக்காக வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலுக்கு மீண்டும் வந்து, சக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். ஆடுகள், கோழிகள் பலியிட்டு கறி விருந்து நடத்துகின்றனர். ஒவ்வொரு அமாவாசையிலும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அச்சமயத்தில், தேவிக்கு சிறப்பு சக்தி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். விரும்பிய வரம் கிடைக்கும் தேவி; கோவிலுக்கு வருவோர் வெறுங்கையுடன் தி ரும்புவதில்லை என, பல பக்தர்கள் கூறுவதை கோவில் வளாகத்தில் கேட்க முடியும். கோவில் நடை காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். பொதுவாக ஞாயி று, செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய கிழமைகளில் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கு சவுடேஸ்வரியை தவிர, விநாயகர், சிவனுக்கும் தனி சன்னிதிகள் உண்டு.
கோவிலுக்கு எப்படி செல்வது?
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பஸ் மூலம் நேரடியாக பிக்கனஹள்ளியை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம். - நமது நிருபர் -