உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / எதையும் தாங்கும் இதயம் இருக்கா?- பொதிகை மலை ஏறலாம்..!

எதையும் தாங்கும் இதயம் இருக்கா?- பொதிகை மலை ஏறலாம்..!

ஜனவரி தொடங்கியாச்சு...அப்புறம் என்ன?மலையேற்றம் செய்யப் பலர் திட்டமிடும் இடம் தான் அகத்தியர் மலை. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செல்ல முடியும் இந்த அதிசயம் நிறைந்த அகத்தியர் மலைப்பகுதியில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அகத்தியர்

அகத்திய முனிவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமுனிவர் என்றும், இவர் முனிவருக்கெல்லாம் முதன்மையானவர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழுக்கான முனிவர் என்றும், இவரது சித்த மருத்துவ முறைகள் அனைத்தும் மகத்தானவை என்றும் அறியப்படுகிறது.

எங்கே உள்ளது?

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே உள்ள பொதிகை மலையில் 6150 கிலோ மீட்டர் உச்சியில் உள்ளது அகத்தியர் சிலை. இந்த மாமுனிவரைத் தரிசிக்க முண்டந்துறை, பாபநாசம், வானதீர்த்தம் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குட்டி, கன்னிக்கட்டி,பூங்குழலி வழியாகப் பக்தர்கள் சென்று வந்தனர். ஆனால் இந்த வழியாகச் செல்ல தமிழக வனத்துறை நிரந்தரமாகத் தடை விதித்துள்ளது.

எப்படிச் செல்லலாம்

கேரள வனத்துறை சார்பில் பொதிகை மலையில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு யாரையும் தனியாக மலையேற அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக பத்துபேர் கொண்ட குழுவாக மட்டுமே மலையேற முடியும். திருவனந்தபுரத்தில் உள்ள வன அலுவலகத்தில் அகத்தியர் கூடத்தில் மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறை ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாட்கள் பொதிகை மலையில் ஏறலாம்.பிரமிக்க வைக்கும் அடர்ந்த வனப்பகுதியான கராமடையாறு பகுதியில் தொடங்குகிறது மலையேற்ற பாதை. இந்த வழித்தடத்தில் சுமார் 6மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் பகுதியை அடைந்து விடலாம். இங்கு முதல் நாள் இரவு தங்கிக் கொள்ளலாம். மீண்டும் மறுநாள் காலையில் அகத்தியரைக் காணப் பயணிக்கலாம். அப்போது தென் பொதிகை என்று அழைக்கப்படும் மான்சரோவர் குளத்தில் குளித்து விட்டு மீண்டும் தொடங்கலாம்.சுமார் 15 நிமிடங்கள் நடந்தால் சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு பகுதியில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் என்ற சுனை இருக்கிறது. இங்குத் தாமிரபரணியின் அழகைப் பார்த்து மகிழலாம். அழகை ரசித்தபடி நடந்தால், வெயிலும், குளிரும் மாறி, மாறி நம்மை நடுங்கச் செய்யும். இதற்குத் துணையாகச் சூறாவளிக் காற்றும் சேர்ந்து நம்மை மிரள வைக்கும். இதற்கு உடலைத் தயாராக வைத்துக் கொண்டு பயணித்தால் த்ரிலிங்கான அனுபவத்தைக் கொடுக்கும்.இதையடுத்து செங்குத்தான மலைப்பகுதியில், கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்து ஏறுவதே சவாலானதாகும். இங்குக் கவனம் சிதறினால் மலையேற்றம் தவறான முடிவாக மாறிவிடும். சிறிது நேரத்தில் நாம் நினைத்த இலக்கை அடைவது போல 6129 அடி உச்சியில் உள்ள பொதிகை மலைச் சிகரத்தை அடையலாம்.இங்குக் குறுமுனியின் சிலை உள்ளது. அவருக்குச் சிறப்புப் பூஜை நடத்தி வழிபாடு செய்யலாம். பிறகு இறுதி பயணத்தை அடைந்த மகிழ்ச்சியோடு, மிகவும் கவனமாக இறங்கி அதிருமலை கேம்ப் ஷெட்டில் இரவு தங்கி விட்டு 5மணி நேரம் நடந்தால், போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனை அடையலாம்.

குறிப்பு

ஒவ்வொரு ஆண்டும் அகஸ்தியரைத் தரிசிக்கக் கேரள அரசு ஜனவரி மாதத்தில், 40 நாட்கள் அனுமதி வழங்குகிறது.சிறுவர்களுக்கு டிரக்கிங் செல்ல அனுமதி இல்லை.www.kerala.tourism.org என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று புக்கிங்க் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை