ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை
கூடு கேட்கும் குருவிகள்திருச்சி, புத்துாரில் உள்ள இப்பள்ளி, 'பார்வை சவால் கொண்ட பெண்களுக்காக தமிழகத்தில் இயங்கும் ஒரே அரசு மேல் நிலைப் பள்ளி' ஆகும்! 1956ல் ஞானம் ஆதிக்கம் என்பவரால் துவக்கப்பட்டு, 1969ல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பள்ளி, 1990ல் மேல்நிலைப் பள்ளியாக மாறியது. பள்ளி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியான இதில், வெளியூர் மாணவியர் உட்பட 103 பேர் பயில்கின்றனர். 'பிரெய்லி' முறையிலான கல்வியோடு, கீ போர்டு, தபேலா உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்கவும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பிலும், 2019ம் ஆண்டு முதல் பிளஸ் 2விலும் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி காண்பிக்கிறது இப்பள்ளி! பெருமை: 'நான் ஆறாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் பயின்று வருகிறேன் இங்கு, அன்றாட நிகழ்வான 'யோகா' பயிற்சி நான் புத்துணர்வோடு செயல்பட உதவுகிறது. 'பார்வை சவால்' கொண்ட எங்களுக்கான பிரத்யேக 'கணினி ஆய்வகம்' எனது தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்த்துள்ளது. பரிசு பெறும் அளவிற்கான என் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு திறனுக்கு இப்பள்ளிதான் காரணம்!' ச.பிரியதர்ஷினி, பிளஸ் 1 மாணவி கோரிக்கை: 'கட்டட வசதிகள்தான் இப்பள்ளியின் தலையாய தேவை; இடப்பற்றாக்குறையால் பள்ளியின் முகப்பு பகுதியைக் கூட வகுப்பறையாக மாற்றி இருக்கிறோம். மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி வசதியும் இல்லை. விசாலமான வகுப்பறைகளும், விடுதியும் எங்கள் மாணவியருக்கு அத்தியாவசிய தேவை!' பா.சோபியா மாலதி, தலைமை ஆசிரியை