அன்புள்ள மனம்
என் 21 வயசுல முதன்முறையா சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில ரத்த தானம் பண்ணினதுக்காக, என் தோள்ல தட்டிக்கொடுத்து 'குட் ஜாப் பாஸ்கரன்'னு ஒரு மருத்துவர் சொன்னாரு! அந்த பாராட்டும் அன்பும்தான் இப்போ நீங்க பார்க்குற இந்த அடையாளத்துக்கு காரணம்! பிள்ளையார் சுழியான 'தற்செயல்' விழுப்புரத்தைச் சேர்ந்த நான், கடந்த 36 ஆண்டுகள்ல 107 தடவை ரத்த தானமும், ஐந்து ஆண்டுகள்ல 62 தடவை தட்டணுக்கள் தானமும் பண்ணியிருக்கேன். 'நாலுபேருக்கு நல்லது செய்யணும்'ங்கிற தீர்மானத்துல ஆரம்பிச்ச பழக்கம் இல்லை இது! சாலை விபத்துல சரிஞ்சு கிடந்தவருக்கு ரத்தம் தரணும்னு ஒருநாள் செஞ்சேன்; அப்படியே பழக்கமாயிருச்சு! மனசாட்சியின் சலனம் 'ரத்ததானம் பண்றதுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னால மது அருந்தியிருக்கக் கூடாது'ங்கிறது விதி. அதனால, இப்படியான நாட்கள்ல நான் மது அருந்துறது இல்லைன்னாலும், 'நான் மது அருந்துறது சரியா'ன்னு எனக்குள்ளே ஒரு சலனம் இருந்துட்டே இருந்தது! 'டாஸ்மாக்' கூட்டத்தை பார்க்குறப்போ எல்லாம், 'மரணத்தோட போராடிட்டு இருக்குற மனுஷனை காப்பாத்துற வாய்ப்பு தன்கிட்டேயும் இருக்குன்னு உணராம இப்படி உடம்பை கெடுத்துக்குறாங்களே'ன்னு வருத்தப்படுவேன். இப்படி, உயிரோட மதிப்பு முழுமையா புரிய ஆரம்பிச்சதும் மதுப்பழக்கத்தை நிறுத்திட்டேன்! திடீர்னு ஒருநாள், 'ஏன் நாம ரத்த தானம் மட்டும் பண்ணிட்டு இருக்குறோம்'னு ஒரு எண்ணம். ஏழு நாட்களுக்கு ஒருதடவை நம்ம உடல்ல புதிய தட்டணுக்குள் உருவாகுறதால, 15 நாட்கள் இடைவெளின்னு வருஷத்துக்கு 24 தடவை நாம தட்டணுக்கள் தானம் பண்ணலாம்னு தெரிய வந்தது. நம்ம மக்கள்ல பாதி பேருக்கு இந்த விழிப்புணர்வு வந்துட்டாலே, தட்டணுக்கள் தேவைப்படுற புற்றுநோய், டெங்கு, தலசீமியா பாதிப்புல இருக்குறவங்களுக்கு பெரிய உதவியா இருக்கும். தீர்க்கமா முடிவு பண்ணினேன்; 60 வயசு வரைக்கும் தட்டணுக்கள் தானம் பண்றதுக்காக, 107 கிலோ உடலை 87 கிலோவுக்கு குறைச்சேன்; இப்போ, ஆரோக்கியமா இருக்குறேன்! காலத்தின் வாய்ப்பு 'இன்னும் ஒரு மாசம் என் இறப்பு தள்ளிப் போகாதா'ன்னு ஏங்குற ஜீவன்கள், நன்றி உணர்வுல கட்டிப்பிடிச்சு தன் கண்ணீரால என் சட்டையை ஈரமாக்குற அவங்க உறவுகள்... இவங்க எல்லாரும்தான், சக உயிரை நேசிக்கிற மனுஷனா என்னை இயங்க வைக்கிறாங்க! நம்ம பிறப்புக்கு அர்த்தம் சேர்க்குற வாய்ப்பை எல்லாருக்குமே காலம் தரும். 'தட்டணுக்கள் தானம்' பற்றி ஸ்ரீவத்சன்னு ஒரு நபர் மூலமா காலம் எனக்கு புரிய வைச்சதை நான் உணர்ந்துட்டேன். இப்போ, இதை வாசிக்கிற உங்களுக்கு நான் ஸ்ரீவத்சனா தெரிஞ்சா, நீங்களும் உங்க பிறப்பை கவுரவப்படுத்த தயாராயிட்டீங்கன்னு அர்த்தம்.