உள்ளூர் செய்திகள்

முகவரி

'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி! இவ்வாரம்... 90 வயது புஷ்பம்மாளின் மகன்; துாத்துக்குடி இடையன்விளை கிராமத்தில் இருந்து 45 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தவரை பலவிதமான அனுபவங்கள் செதுக்க...இன்று 27 லட்சம் வணிகர்களை உறுப்பினர்களாக கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்... ஏ.எம்.விக்கிரமராஜா. 'லாபம்' பார்க்கும் வியாபாரம் - பாவமா... புண்ணியமா?வாடிக்கையாளரோட குடும்பத்துல ஒருத்தனா நின்னு, 'கொண்டு போங்கண்ணே... அக்காவோட மருத்துவ செலவெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் பணம் கொடுங்க போதும்'னு மளிகையை நீட்டுறதும் வியாபாரிதானே! 'தரமான பொருள் - தரமான மனம்' - தங்களை ஈர்ப்பது எது?பொருளோட தரத்தை வைச்சு அதை தயாரிச்சவனோட மனசை புரிஞ்சுக்கிற ஆளு நான்; 'பொருளை இவ்வளவு தரமா கொடுக்குறவனோட மனசு எப்படிப்பட்டதா இருக்கும்'னு பழகி அனுபவிக்க ரொம்பவே ஆசைப்படுவேன்! மனித மனதை என்னென்ன செய்யும் பணம்?'அவனை ஏன் மதிக்கணும்'னோ, 'இனிதான் ஒழுக்கமா இருக்கணும்'னோ, 'இன்னும் சம்பாதிக்கணும்'னோ, 'இது போதும்'னோ யோசிக்க வைக்கும்; இதெல்லாம் பணத்தோட மவுனத்தை நாம புரிஞ்சுக்கிற விதத்துல இருக்கு! 'ஏழ்மை' என்றதும் தங்கள் மனதில் ஓடும் காட்சிகள்...?என் கிராமத்துல மூன்றரை மணி நேர வேலைக்கு 600 ரூபாய் கூலி; ஆனா, அந்த கூலி போதும்னு காலையில 10:00 மணிக்கே உழைப்பை நிறுத்திட்டுப் போயிடுறாங்க! 'ஏழ்மை'ங்கிறது நமக்கு நாமே கொடுத்துக்குற தண்டனை!இந்த உலகம் யாருக்கானது? 'இப்படித்தான் வாழணும்'னு படிப்பு சொல்லி கொடுக்குறதால, படிப்பு கைகாட்டுற பாதை யிலேயே படிச்சவங்க பயணம் பண்றாங்க; ஆனா, கால்போன போக்குல போய் புதுப்புது பாதைகளை படிக்காதவன் உருவாக்குறான்! 'நிறைய படித்தால் நிறைய சம்பாதிக்கலாம்' எனும் அறிவுரை நல்ல நகைச்சுவையா?கண்டிப்பா நான் சிரிப்பேன்; ஏன்னா, படிக்கிறதை உழைப்பா நான் நினைக்கிறதில்லை. 'அனுபவம் தராத எதுவும் படிப்பு ஆகாது'ன்னு நான் நம்புறேன். பள்ளி படிப்பு தாண்டாத என்னோட அனுபவ சம்பாத்தியம் ரொம்ப அதிகம்! 'வெள்ளை உடை' - சமூகத்தின் பார்வையில்...?அதிகார வர்க்கத்தோட அடையாளமா போனதால, எளிய மக்கள் அண்ணாந்து பார்க்குற உடையா மாறிடுச்சு. நான் வெள்ளை உடை உடுத்த இரண்டே காரணம்... காமராஜர் மேல இருக்குற ஈர்ப்பு; என் தோல் நிறமான கறுப்பு! என்ன சொல்லி உங்களைப் பாராட்டினால் உங்களுக்கு கூச்சம் வரும்?'நல்ல மனுஷன் விக்கிரமராஜா'ங்கிறதை தவிர என்ன சொல்லி என்னைப் பாராட்டினாலும் எனக்கு கூச்சம் வரும்; வணிகர்கள் முன்னேற்றத்துக்கு உழைக்க எனக்கு கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை எதுக்காக பாராட்டணும்?சந்தோஷத்தை 'ஆடம்பர வாழ்க்கை' அள்ளித் தருமா?சாலையோரத்துல வாழ்றவங்க முகத்துல இருக்குற சிரிப்பை, பங்களா பால்கனியில வசதியான நாற்காலியில உட்கார்ந்து இருக் கிறவங்க முகத்துல நீங்க பார்த்திருக்கீங்களா; கூடு வாழ்க்கை தர்ற சந்தோஷம் ரொம்ப பெருசு! இருப்பவன் கொடுக்காதது குற்றமா; இல்லாதவன் எடுப்பது குற்றமா?இருக்குறவன் கொடுக்கலேன்னா அது அவன் மனிதத்தன்மையில உள்ள குறை; அதேமாதிரி, அனுமதியின்றி இல்லாதவன் எடுக்குறது அவனுடைய சூழல் அடிப்படையிலான பிழை; இரண்டுமே குற்றம் இல்லை! உங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து விட்டீர்களா?லுங்கியோட தலையில துண்டு கட்டிக்கிட்டு வயல்ல இறங்கி வேலை பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, 15 ஆண்டுகளா இந்த பொறுப்புல அதுக்கு சாத்தியமில்லை; இதனால எனக்கு சங்கடமும் இல்லை! உறவுகள் நீடிக்க விக்கிரமராஜா பயன்படுத்தும் சூத்திரம்?'இன்னொரு பிறப்பு, அதுலேயும் இதே உறவுகளோடு தொடர்பு... இது எதுக்கும் சாத்தியம் இல்லை'ங்கிற உண்மையை எந்நேரமும் மனசுல சுமந்துக்கிட்டே பழகினா போதும்; எந்த உறவும் நம்மால விலகிப் போகாது! இன்னும் 50 ஆண்டுகள் கழித்து எதற்காக பேசப்படுவீர்கள்?சென்னை, கே.கே.நகர் டாக்டர் ராமசாமி சாலையில ஒரு அடையாளமா நிற்குது நாங்க உருவாக்கின வணிகர் சங்கங்கள் பேரமைப்பு கட்டடம். எங்க காலத்துக்கு அப்புறமும் இங்கே இருந்து எடுக்கப்படுற நடவடிக்கைகள் வணிகர்களை காக்கும்! எதன் முன்னால் நிற்கையில் நீங்களும் பலவீனமானவர்?பசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !