சர்தார் 2
இந்த சம்பவத்துக்கு காரணம் ஜப்பான்காரன் டீக்கடை பாய்லரை ஞாபகப்படுத்துற மாதிரி பெருசா நாசக்கார பொருளை தயாரிச்சு வைக்கிறான் ஜப்பான்காரன். நம்ம மண்ணுல அது உருண்டு வந்து கிருமி பரப்ப, பலபேர் செத்துப் போறாங்க. செயலிழந்து கிடக்குற அதுக்கு உயிர் கொடுக்க வர்றான் வில்லன்; அவனைத் தடுக்க வர்றது சர்தார் அண்டு சன்! முதல்பாகத்துல, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணியை 'விஷம்'னு சொன்ன சர்தார், இதுல 'ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் எடுத்துக்கிறது ஆபத்து'ன்னு ஆதாரங்களோட சொல்றார்! 'அந்த 'விஷ பாய்லர்' நம்ம மண்ணுக்கு எப்படி வந்தது'ங்கிற களத்துல சர்தாருக்கு 'பேட்டிங்' வாய்ப்பு; அதை இப்போ தேடிட்டு இருக்குற வில்லனை கண்டுபிடிக்கிற களத்துல மகன் விஜியோட பேட்டிங்; இந்த பக்கம் அப்பனும், மகனும்... அந்த பக்கம் வில்லன் எஸ்.ஜே.சூர்யா... அந்த பதினைஞ்சு நிமிஷம்... சும்மா சொல்லக்கூடாதுங்க... ஒருபக்கம் 'பவுலிங்' போட்டுக்கிட்டே, மறுபக்கம் 'பேட்டிங்'கும் பண்ணிக்கிட்டு, ஒவ்வொரு பந்துக்கும் 'சிக்ஸர்' காமிக்கிற 'அம்பயர்' வேலையும் பார்த்துக்கிட்டு... எஸ்.ஜே.சூர்யா... அதகளம்! ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரெண்டு கார்த்தி இருந்தும், படத்துல ஒரு 'டூயட்' கிடையாது; அவசியமில்லை... கையில எடுத்துட்டு வந்த பதிலுரையை, சட்டசபையில தண்ணி குடிக்காம கடகடன்னு வாசிச்ச நம்ம முதல்வர் மாதிரி, படம் பரபரன்னு இறக்கை கட்டி பறக்குது! 'அப்பாடா... காப்பாத்திட்டான்; இல்ல... காப்பாத்தலை - அய்யய்யோ... செத்துட்டாரா; இல்ல... சாகலை - சபாஷ்... தப்பிச்சிட்டான்; இல்ல... மாட்டிக்கிட்டான் - அவ்வளவுதானே... இனிமே என்ன இருக்கு; இல்ல... இனிமேதான் எல்லாமே இருக்கு!' - இப்படியாக சிந்திக்க வைத்து, நாம் சிந்தித்ததை உடனுக்குடன் முறித்து போடும் காட்சிகளை அடுத்தடுத்து கடைசி வரை அடுக்கி இருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். இத்தனையும் நம்மை குழப்பிவிடாது நேர்த்தியாய் கோர்த்திருக்கும் படத்தொகுப்பால், சர்தாருக்கு திலகமிடத் தோன்றுகிறது. ஆக... 'சர்தார் 3 எப்போது வந்தாலும் முதல்நாள் வசூலில் நிச்சயம் தோற்காது' என்பது சத்தியம்