உள்ளூர் செய்திகள்

ஏழரை கேள்விகள்

வீம்பின் விளிம்பில் நாகராஜசோழன் 'ஆளுமைமிக்க தலைவனாய், 2021 சட்டசபை தேர்தலில் அனைவரையும் நீங்கள் அரவணைத்து சென்றிருப்பின் தி.மு.க.,வும் ஜெயித்திருக்காது; த.வெ.க.,வும் முளைத்து இருக்காதே' எனும் ஆதங்கம் கொண்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் இக்கேள்விகளை நீட்டுகின்றனர்... 'எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா' விசுவாசிகள்! 1 'ஐந்தாண்டு காலம் அதிக விமர்சனங்களுக்கு உட்பட்டு நடந்த ஆட்சியை இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பிறந்த கட்சி வீழ்த்திவிட முடிகிறது எனில், அந்த ஐந்தாண்டு காலத்தில் நாம் செய்த அரசியல் என்ன' எனும் சிந்தனை இப்போதாவது எழுந்திருக்கிறதா? 2 'களத்தில் இல்லாத எதிரியோடு போராடி தோற்றிருக்கிறோம்' என்று தன் தோல்வியை முதிர்ச்சியோடு தி.மு.க., ஒப்புக்கொண்டது போல், 'இதுவே எங்கள் தொடர் தோல்விக்கான காரணம்' என, உங்கள் பதவி எதையேனும் இதுவரையில் ஒப்புக் கொண்டதுண்டா? 3 'அ.தி.மு.க.,வும் த.வெ.க.,வும் ஒன்று தான்; அ.தி.மு.க., தொண்டர்கள் இங்கே வரத் தயாராகி விட்டனர்' என த.வெ.க., வலை வீசி விட்டது; 'எம்.ஜி.ஆர்., - விஜய்' வெற்றியை எந்தவகையில் வேறுபடுத்தி, நம் மீன்களை தக்க வைக்கப் போகிறீர்கள் ? 4 அமைதிப் படை படத்தின் நாகரா ஜசோழன் பாத்திரத்திற்கு நிகரான அரசியல் சாமர்த்தியசாலியாய் உங்களை அண்ணாந்து பார்த்த தமிழகம், 'அ.தி.மு.க., அலங் கோலமாகிவிட்டது' என்கிறது. 'இதற்கு யார் காரணம்' எனக் கேட்டால், ஒரு தளபதியாய் யாரை கை காட்டுவீர்கள்? 5 இளைஞர்கள் அரசியல் களம் நோக்கி அணி வகுத்திருக்கும் இன்றைய சூழலில், 'அ.தி.மு.க., எனில் நானே' என்று போராடிக் கொண்டிருக்கும் நீங்கள், 'பழனிசாமிக்கு பின் அங்கு யார்' என இளைஞர்கள் பேசத்துவங்கி இருப்பதை அறிவீர்களா? 6 'தி.மு.க., ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ, அதுவே... அதுமட்டுமே எங்களின் நிரந்தர அரசியல் எதிரி' என்று இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரம் செய்திருந்தால், 'தி.மு.க., உடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க., முயன்றது' எனும் களங்கம் ஓரளவு அழிந்திருக்கும் அல்லவா? 7 த.வெ.க., ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து மாதங்களில், எதிர்க்கட்சியான தி.மு.க.,வின் செயல்பாடுகளை பின் தள்ளும் அளவிற்கோ அல்லது இணையாகவோ, நம் அ.தி.மு.க., முன்னெடுத்த அரசியல் செயல்பாடு என்று எதனைச் சொல்வீர்கள்? 7 ½ இனி, அ.தி.மு.க.,வின் இலக்கு முதலிடமா, 2வது இடமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !