கதையும் கலையும்: பொன்னாய் மின்னும் மண்குதிரை
தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் இருக்கிறது பழங்குளத்து அய்யனார் கோவில். சாலையிலிருந்து கோவிலின் நுழைவாயில் வரையிலான 500 மீட்டர் துாரத்திற்குள், வீரர்கள் கடிவாளம் பிடித்திருக்க, வேட்டை நாய் சகிதமாக, 15 அடி உயர கம்பீர குதிரை சிற்பங்கள்!வேண்டுதல் நிறை வேறியதால் கட்டப்பட்ட அவை அனைத்திலும் நம் கவனத்தை வெகுவாய் ஈர்த்தது, அப்படை வரிசையில் பக்கத்திற்கு ஒருவராய் இருவீரர்கள் கடிவாளம் பிடித்தபடி நிற்கும் குதிரை சிலை ஒன்று! அந்த குதிரையின் வண்ணத்திலிருந்து தன் கற்பனையை துவக்கி இருப்பார் போல சிற்பி; சூரியனால் மின்னும் பொன் வானத்திலிருந்து இறங்கி வந்தது போல் தகதகத்தது குதிரை. காதுகள் விடைத்தபடி நின்ற அதன் வலப்புறத்தில் யவன வீரன்; இடப்பக்கத்தில் தமிழ் மறவன்! பரந்த மார்பும், விரித்த கரங்களுமாய் புஜபலம் காட்டி நிற்கும் யவனனின் இடையில் ரோமானிய வீரர்களின் போர் ஆடை. தழைய கட்டிய வேட்டியில் நம் வீரன். 'வீரத்தில் தமிழன் சளைத்தவனில்லை' என்கிறது நம்மவன் மார்பில் இருக்கும் 'சன்னவீரம்'எனும் வெற்றி அணிகலன்! 'ரசிகன்டா இந்த சிற்பி' என்று சொல்ல வைக்கிறது, வேட்டை நாயில் அவர் காட்டியிருக்கும் கற்பனை; மற்ற குதிரைகளுக்கு அருகில் நின்றோ, அமர்ந்தோ இருக்கும் வேட்டை நாய், இந்த தங்க குதிரையின் காலடியில் அமர்ந்து உற்சாகமாய் முரசறைந்து கொண்டிருக்கிறது. 'வேண்டுதல் நிறைவேறியதற்கான காணிக்கை குதிரைதான் இது' என்றாலும், அதில் பாட்டி சொல்லும் பராக்கிரம கதைகளின் ஒரு பாத்திரத்தை காட்சி ஆக்கியிருக்கும் சிற்பி, தன் கற்பனை வளத்தால் அதனை காவியமாக்கி இருக்கிறார்.