உள்ளூர் செய்திகள்

பட்வாரா 1947 (ஹிந்தி)

நம் தேச வரைபடத்தின் தழும்பு'இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட நம் மக்கள், அதிலிருந்து மீண்டு வந்து தங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டி எழுப்பினர்' என, ஆகஸ்ட் 14ல், தேசப் பிரிவினை கொடுமைகள் தினத்தில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தாரே... அப்படியாக, 1947ல் இந்தியாவின் மீரட் நகரில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகரத்திற்கு இடம்பெயர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம் மற்றும் அங்கு வசிக்கும் ஒரு ஹிந்து பாட்டியின் வழி, பிரிவினையின் கனம் பகிர்கிறது இப்படைப்பு! பிறந்து வளர்ந்த ஊரை, உறவுகளை, பிள்ளைகளின் கல்வியை, கால்நடைகளை எல்லாம் கைவிட்டு, வேறொரு இடம் செல்லும் சூழலை எதிர்கொள்ளும் அகத்தின் வலியை, லட்சக்கணக்கான முகங்கள் ஒரு முகமாக மாறி வெளிப்படுத்தினால் எப்படி இருக்குமோ, அப்படியிருக்கிறது இத்திரைக் கதையின் முதல் 30 நிமிடங்கள்! இதற்கு மத்தியில், அங்கும் இங்குமுள்ள 'மதம்' பிடித்தவர்களால், 'ஊருக்குள் மயானம் இருக் கிறது' எனும் நிலைமாறி, 'மயானத்திற்குள் தான் ஊரே இருக்கிறது' எனும் நிலை ஏற்படுகிறது. இக்காட்சிகளை கடக்கும்போது, 'அய்யோ... என் தேசமே' என பதறுகிறது மனம். லாகூருக்கு இடம்பெயர்ந்து வந்தநிலையில், 'பிரிவினை' பற்றி கேள்வி எழுப்புகிறாள் பள்ளி செல்லும் மகள்; 'இரண்டு தரப்பு ஆண்கள் சந்தித்து, அவர்களுக்குள் விவாதித்து எடுத்த முடிவு இது' என்கிறாள் தாய். அவளின் வார்த்தைகள் சலனமற்ற குளத்தில் விழும் கல்லாகிறது நமக்குள்! 'நாடகத்தை தழுவிய கதை' என்பதால் நாடகத் தன்மை திரையிலும் பளிச்சிடுகிறது. மதம் கடந்து மனிதம் காப்பது அசாதாரணமாக கருதப்பட்ட காலத்தில், அதற்கான இழப்புகளை சந்தித்தவர்களது அன்பின் தீரம் சொல்லி கண்கலங்க வைக்கிறது க்ளைமாக்ஸ். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் ராஜ்குமார் சந்தோஷியின் இயக்கம் மூ ன்றும் சேர்ந்து, படம் முடிந்ததும் ஓடிப்போய் நம் தேசத்தை கட்டியணைத்து ஆறுதல் சொல்லத் துாண்டுகிறது. ஆக...தழும்பிற்கு வயது 79 எனினும் உணரும் வலியோ... 'காயத்தின் வயது ஒன்று' என்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !