சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்
நாள்தோறும் ஏதோ மாறுதல்... வானும் மண்ணும் வாழும் ஆறுதல்... பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...' - நெற்றிக்கண் பாடல் வரிகளால் நம் மனதிற்கு நெருக்கமான சினிமா பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, தன் வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஓர் இடம், ஒரு மணம், ஒரு கடிதம் குறித்து நமக்கு பரிமாறுகிறார்.அந்தவொரு இடம்சென்னை, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நுாலகம். புத்தகங்களில் அச்சிடப்பட்ட தகவல்களைக் காட்டிலும் பக்கங்களுக்கு இடையில் சொருகப்பட்ட காதல் சீட்டுக்கள்; மர இலைகள்; அலைபேசி எண்கள் உள்ளிட்டவை மனித மனம் இயங்கும் போக்கை நெருக்கமாக உணர வைத்தது! அப்படித்தான் ஒரு புத்தகத்திற்குள் இருந்து கிடைத்தது அவளது புகைப்படம். அப்படியொரு வடிவான முகம். அவளை யாரென்று கண்டுபிடிக்கும் முயற்சியில் எல்லாம் இறங்கினேன். எனக்குள் இருந்த காதல் உணர்வை வெளியே உருவி எடுத்தவளின் அழகு முகம் பற்றி 30 கவிதைகள் எழுதினேன். அந்த நுாலகத்தில் கழித்த ஒவ்வொரு நாளும் மனதில் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டுதான் வீடு திரும்பி இருக்கிறேன்!அந்தவொரு மணம்அண்ணாமலையாரை பார்க்கத் தோன்றிவிட்டால் உடனே பேருந்து ஏறிவிடுவேன். அப்படியான ஒரு பயணம் அது; எனக்கு முன் இருக்கையில் தாயின் தோள் மீது சாய்ந்தபடி ஒரு குழந்தை உறங்கி கிடந்தது. அதன் முகத்தைப் பார்க்க பார்க்க எனக்குள் இனம்புரியாத உணர்வு; ஏதேதோ தேட மனம் வெளியே பறந்தது! சட்டென என் மீது ஏதோ மென்மையாய் ஒரு மோதல்... மீண்டும் பேருந்துக்குள் வந்தது மனம்; விழித்துவிட்ட குழந்தை தன் தாயின் மல்லிகை சரத்தில் இருந்து ஒரு மொட்டை உருவி என் மீது வீசியிருந்தது. புன்னகைத்தேன்; நான் தந்ததை பெரும் வட்டியோடு உடனே திருப்பித் தந்தது குழந்தை! அன்றைய கிரிவலம் முழுக்க என் கைக்குள் அந்த மல்லிகை மொட்டு. இன்றும், மல்லிகை மணம் நுகர்கையில் எல்லாம் இறை வடிவான அக்குழந்தையின் முகம் என் நினைவில்! அந்தவொரு கடிதம்கிராம சுகாதார செவிலியான என் அம்மாவிடம் உதவியாளராக இருந்த ஆயாதான் சிறுவயதில் என்னை பராமரித்தார். காலப்போக்கில் ஆயாவிடம் இருந்து விலகிவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது. 'ஆயா... நான் கார்த்தி வந்திருக்கேன்' என்ற என் குரல் கேட்டாலும் அவரால் பேச இயலவில்லை. இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தோம். சற்றுநேரத்தில், ஆயாவின் கண்களில் நீலம் பூத்தது; உயிர் காற்றில் கலந்தது. உடலில் இருந்து உயிர் விடைபெறும் கணத்தை அன்று கண்டேன். அறைக்குத் திரும்பியதும் அத்தனை ஆண்டுகளாக ஆயாவைப் போய் பார்க்காததை எண்ணி அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இறந்து போன ஒரு மனுஷிக்கு நான் எழுதிய அந்த கடிதம் மறக்க முடியாதது.