உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

வெட்டுவான்கோவில் கோபுர சிகரம்; அதில், தெற்கு நோக்கி அமர்ந்து மிருதங்கம் இசைக்கும் ஒரு சிற்பம். தான் எழுப்பும் இசையை பாறைகளில் மோதவும், காற்றில் புரளவும், காலத்தில் கரைந்து போகவும் செய்யும் அவ்விரல் வித்தகரின் நாமம்... தட்சிணாமூர்த்தி! கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையின் கழுகுமலையின் வடபுறத்தில் உள்ளது வெட்டுவான்கோவில். கோபுரத்தின் தெற்குபக்கத்தில் வலதுகால் மடித்து, இடதுகாலை தொங்க விட்டு ஒய்யாரமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறார் தட்சிணாமூர்த்தி! தொங்கும் இடதுகால் 'அறியாமை' எனும் குள்ள அரக்கனை மிதித்திருக்கிறது! நான்கு கரங்களுடன் இந்த தட்சிணாமூர்த்தி; பின்னிரு கரங்களில் வலக்கரம் பரசுவைத் தாங்க, இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை; முன்னிரு கரங்களில் வலக்கரம் மிருதங்கம் இசைக்க, இசைக்கருவியை அணைத்திருக்கும் இடக்கரத்தின் விரல்களை சிதைத்திருக்கிறது காலம்! 'சுருள்முடியுடன் ஜடாபாரம்; காதில் பத்ரகுண்டம்; கழுத்தில் பதக்கம், முத்தாரம்; இடையில்... கற்கள் பதிக்கப்பட்ட அரைப்பட்டை; கீழ்நோக்கிய பார்வையுடன் சற்றே வலப்புறம் சாய்ந்திருக்கும் முகத்தில் சிற்பியின் திறன் சொல்லும் புன்முறுவலை கவனித்தீர்களா' என்கிறார் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை காப்பாட்சியர் செ.மா.கணபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !