தி கேம்: யு நெவர் ப்ளே அலோன் இணைய தொடர்
பெண்கள் மீதான வெறுப்புணர்வை மையப்படுத்தும் க்ரைம் த்ரில்லர்!'வீடியோ கேம்' வடி வமைப்பாளர் காவ்யாவுக்கு ஒரு விருது கிடைத்தபின், சமூக வலைத்தளங்களில் அவரை தவறாக சித்தரிப்பது அதிகரிக்கிறது. ஓர் இரவில் கடத்தப்பட்டு காயங்களுடன் மீட்கப்படு கிறார் காவ்யா; சந்தேக நிழலில் அவரது கணவர், விருது போட்டியாளர்கள் என பலர்! கடத்தல் முகமூடியில் மறைந்து இருப்பது யார்? குடும்பத்தில், பணி இடங்களில், பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கதைகளாக சொல்லப்பட்ட அள விற்கு, இணையத்தில் நிலவும் பெண் வெறுப்பு குறித்து கதைகள் வந்ததில்லை! பெண்களை தவறாக சித்தரிக்கும் புகைப் படங்களை ஆண்கள் குறுகுறுப்புடன் 'லைக்' ெசய்வதற்கு பின்னுள்ள பெண் வெறுப்பு மனநிலையை அசலாக காட்டுகிறது இத்தொடர்! ஆனால், விசாரணை அதிகாரி பானுமதி கேட்கும் எந்த கேள்விக்கும், 'இன்னும் கைக்கு வரலை மேடம்; ரெண்டு நாள் ஆகும் மேடம்' என்கிற எஸ்.ஐ.,யின் பதில்களில் கதை ஆசிரியர்களின் அனுபவமின்மை வெளிப்படுகிறது! இந்த மொத்த சம்பவமும் எத்தனை நாட்களுக்குள் நிகழ்கி றது என்கிற தெளிவு இல்லை. கன்னாபின்னாவென வந்து போகும் பகல், இரவு காட்சிகள் விசாரணை வழியே நமக்கு கிடைக்க வேண்டிய 'த்ரில்லர்' உணர்வை சீர்குலைக்கின்றன. பாத்திரத்துடன் ஒன்றிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பு மட்டுமே சலிப்பான கதையோட்டத்தை சகிக்க வைக்கிறது! 'வலுவான பாத்திரங்கள் கட்டமைப்பின்றி ஒரேயொரு பரபரப்பு சம்பவத்தை மட்டுமே கொண்டு 235 நிமிடங்களுக்கு ஏழு அத்தியாயங்களை நகர்த்தி விடலாம்' என்று நம்பி யிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா. 'சைபர் க்ரைம் - பெண் பாதுகாப்பு' காம்போ மீது ஆர்வம் கொண்டோருக்கு இந்த கேம் பிடிக்கலாம். ஆக...வெள்ளிதிரையிலும், இல்லத்திரையிலும் இது ரசிகனுக்கு போதாத காலம்!